கல்வி நிறுவனங்களில் களைகட்டிய பொங்கல் விழா

 

திருப்பூர், ஜன.14: தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் எடுத்துக்கூறும் வகையிலான தமிழர் திருநாள் தைப்பொங்கல் பண்டிகை, ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கல்வி நிறுவனங்களுக்கு இன்றைய தினம் முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களோடு சேர்ந்து மாணவிகள் பொங்கல் வைத்து, வழிபாடு நடத்தினர்.

அப்போது, பொங்கல் பொங்கி வரும்போது ஆசிரியர்களும், மாணவிகளும் சேர்த்து ‘பொங்கலோ பொங்கல்’ என கோஷமிட்டு மகிழ்ந்தனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் உணவு திருவிழா ஆகியவை நடத்தப்பட்டது. இதேபோல் காதர்பேட்டை பகுதிகுயில் உள்ள நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள குமரன் கூட்டுறவு மகளிர் கல்லூரியில் மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடியும், விளையாட்டுகளில் பங்கேற்றும் மகிழ்ந்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கல்லூரி வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி, பெரிச்சிபாளையம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட பொங்கல் திருவிழா நடைபெற்றது.

Related Stories: