திருப்பூருக்கு வரத்து குறைந்தது அரசாணிக்காய் விலை உயர்வு

 

திருப்பூர், ஜன. 14: தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை, நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. முன்னதாக இன்று (புதன்) போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலுமாக கொண்டாடக்கூடிய போகி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வீட்டின் முகப்பு பகுதிகளில் வேப்பிலை, பூளைப்பூ, மஞ்சள் பூ உள்ளிட்டவற்றை வைத்து காப்பு கட்டுதல் வழக்கம். காப்பு கட்டுதலோடு இன்று மதியம் அல்லது இரவு இயற்கைக்கும் குலதெய்வங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் காப்பு கட்டுசோறு படைத்து வழிபடுவார்கள்.

இதில் முக்கிய பங்கு வகிப்பது அரிசி பருப்பு சாதம் மற்றும் அரசாணிக்காய் கூட்டு. சுத்தமான அரிசியில் சத்தான உணவு சமைப்பதற்காக அரிசி பருப்பு சாதம், கோடை காலம் முடிந்து தை மாதம் பிறப்பதையொட்டி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்யவும், மஞ்சள் மங்கலகரமான தை மாதத்தை வரவேற்கவும், அரசாணிக்காய் பயன்படுத்தப்படுகிறது. இதனை காப்பு கட்டுசோறு என இறைவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.

இதற்காக அரசாணிக்காய் தேவை அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று தென்னம்பாளையம் சந்தைக்கு அரசாணிக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த ஆண்டு வழக்கத்தை விட வரத்து குறைவு என்பதால் விலை சற்று அதிகரித்து 45 கிலோ எடை கொண்ட அரசாணிக்காய் மூட்டை 450 முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனையில் கிலோ 15 முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்டது.

Related Stories: