வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி கருமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி காயத்திரி(35), நேற்று காலை மாமியார் சின்னப்பிள்ளை (60) மற்றும் தந்தையுடன் நங்கவள்ளியில் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு புறப்பட்டார். இவர்கள், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கருமாபுரம் அடுத்த 10வது கல்மேடு பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது, அவ்வழியாக 2 பெண்களுடன் டூவீலரில் வந்த செம்மன் (60) என்பவர், இவர்கள் மீது மோதுவதுபோல் சென்றார்.
இதை தட்டிக்கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டம் சேர்ந்தது. இதனால் கட்டுமான பொருள் ஏற்றி வந்த சரக்கு வேனை டிரைவர் நிறுத்த முயன்றுள்ளார். அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி, சரக்குவேன் மீது மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சின்னப்பிள்ளை, காயத்திரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 2 பெண்கள் மற்றும் வேன் டிரைவர் அருள்குமார் உள்பட 5 பேர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
