சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் செயல்படும் சட்ட விரோத ரிசார்ட்டுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகளை அகற்ற உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தலமலை, கேர்மாளம், ஆசனூர் பகுதியில் செயல்பட்டு வந்த 42 தங்கும் விடுதிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். அதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி பெறுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ரிசார்ட் உரிமையாளர்கள் இதுவரை எந்தவிதமான ஆவணங்களையும் சமர்ப்பிக்காததால் நேற்று காலை ஈரோடு ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உமா சங்கர் தலைமையில் 5 குழுக்களாக பிரிந்து வருவாய்த்துறை, காவல்துறை, மின் வாரியம் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கேர்மாளம், தலமலை, ஆசனூரில் செயல்படும் 42 சட்டவிரோத தங்கும் விடுதிகளுக்கு சீல் வைத்தனர். இது குறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறுகையில், முறையாக அனுமதி பெறுமாறு ரிசார்ட் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் யாரும் பதில் அளிக்க முன் வராததால் சீல் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
