புதுடெல்லி: ஊழல் வழக்கில் அரசு ஊழியர் மீது விசாரணை நடத்த முன் அனுமதி கட்டாயம் எனக் கூறும் சட்டப்பிரிவு 17ஏ குறித்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் இறுதி முடிவுக்காக இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும். ஊழல் தடுப்பு சட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு சட்டப்பிரிவு 17ஏ பிரிவு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், லஞ்ச, ஊழல் வழக்கில் அரசு ஊழியரிடம் விசாரணை நடத்த தகுதியான அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. தகுதியான அதிகாரியிடம் முன் அனுமதி பெறாமல் விசாரணை நடத்த தடை விதிக்கப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து சென்டர் பார் பப்ளிக் இன்ட்ரஸ்ட் லிட்டிகேஷன் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் கே.வி.விஸ்வநாதன் அமர்வு இரு வேறு மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளது. நீதிபதி பி.வி.நாகரத்னா தனது தீர்ப்பில், ‘‘ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 17ஏ அரசியலமைப்பிற்கு எதிரானது.
அது நீக்கப்பட வேண்டும். ஊழல் செய்த ஊழியரை காவல் துறை விசாரிக்க முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற, முன் அனுமதி தேவைப்படுவது சட்டத்தின் நோக்கத்திற்கு முரணானது. இது விசாரணையைத் தடுத்து, நேர்மையானவர்களையும், உண்மையில் எந்தப் பாதுகாப்பும் தேவையில்லாத ஒருமைப்பாடு கொண்டவர்களையும் பாதுகாக்க முயல்வதற்குப் பதிலாக, ஊழல்வாதிகளைப் பாதுகாக்கிறது’’ என கூறி உள்ளார்.
நீதிபதி கே.வி.விஸ்வநாதன் தனது தீர்ப்பில், ‘‘சட்டப்பிரிவு 17ஏ-ஐ நீக்குவது குளிப்பாட்டிய நீருடன் குழந்தையையும் வெளியே எறிவதற்குச் சமம். சிகிச்சை நோயை விட மோசமாகிவிடும். பிரிவு 17ஏ அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும். ஆனால், அந்த அனுமதி லோக்பால் அல்லது மாநிலத்தின் லோக் ஆயுக்தாவால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டது.
இந்த விதியின் பாதுகாப்பு நேர்மையான அதிகாரிகளின் கைகளை வலுப்படுத்தும், அதே நேரத்தில் ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதையும் உறுதி செய்யும்’’ என கூறினார். இதையடுத்து இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டதால், வழக்கை உயர் அமர்வுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிஅனுப்பி வைப்பார்.
