புதுடெல்லி: தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் தெரு நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வந்துள்ளது. இந்த நிலையில் அது தொடர்பான விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நாய் பிரியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ” தேசிய அளவில் நாய்களை தத்தெடுத்துக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டும். குறிப்பாக பத்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகை வழங்கலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரு நாய்கள் குறித்து பல வழக்கறிஞர்கள் இந்த நீதிமன்றத்தில் வாதாடினார்கள். ஆனால் மனிதர்கள் சார்பாக இங்கு யாரும் வாதாடவில்லை.
குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு நாய் கடிக்கும், உயிரிழப்புக்கும் மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். நடவடிக்கை எடுக்காததற்காக மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய தொகையை இழப்பீடாக தர உத்தரவிட நேரிடும். ஏனென்றால் இதற்கு அவர்கள் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். தெரு நாய்களுக்கு உணவளிக்க விரும்பினால் அவற்றை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
