பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து நீடிக்கிறது: ராணுவ தளபதி அதிரடி

 

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத அமைப்புகளின் கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டன.

இந்நிலையில், டெல்லியில் நேற்று ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி அளித்த பேட்டியில் கூறியதாவது: தீவிரவாத உள்கட்டமைப்புகளை அழிப்பதற்காக ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் ஆழமாக தாக்கியதாலும், பாகிஸ்தானின் நீண்டகால அணுசக்தி வீராப்பு பேச்சை பொய்யாக்கியதாலும் சில முக்கிய அனுமானங்களை மறுசீரமைக்க முடிந்தது.

உங்களுக்கே தெரியும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் மூலம், எதிர்காலத்தில் செய்யப்படும் எந்தவொரு தவறான முயற்சிக்கும் உறுதியான பதிலடி தரப்படும். எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு இந்தியாவின் திட்டமிட்ட, உறுதியான பதிலடியே ஆபரேஷன் சிந்தூர். இது தயார்நிலை, துல்லியம், தெளிவை வெளிப்படுத்துகிறது. இந்திய ராணுவம் தனது படைகளை திரட்டி, தரைவழி தாக்குதலுக்கும் தயாராகவே இருக்கிறது.

சீனாவுடனான அசல் கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) பகுதியில் நிலைமை சீராக உள்ளது. ஆனாலும் தொடர் கண்காணிப்பு தேவை. புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளால் நிலைமை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது. ஜம்மு காஷ்மீரில் நிலைமை உறுதியான கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: