காங். பெண் எம்எல்ஏ ஆடை குறித்து ஆபாச பதிவு: பெங்களூருவில் வாலிபர் அதிரடி கைது

பெங்களூரு: காங்கிரஸ் பெண் எம்எல்ஏவின் ஆடை குறித்து சமூக வலைதளத்தில் ஆபாசமாக விமர்சித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் மூடிகெரே சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்எல்ஏ நயனா மோட்டம்மா என்பவரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாசமாகவும், அவரது ஆடை குறித்தும் இழிவாகவும் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தார். இதுதொடர்பாக எம்எல்ஏவின் உதவியாளர் சம்சுதீன், மூடிகெரே காவல் நிலையத்தில் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் சைபர் கிரைம் போலீசார் ஐபி முகவரி மற்றும் சமூக வலைதள கணக்கு ஆகியவற்றை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் ராமநகரைச் சேர்ந்த யக்ஷித் ராஜ் என்ற நபர் தான் இந்தச் செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பெங்களூருவில் வேலை செய்து வந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். எம்எல்ஏவின் ஆடை குறித்து அவதூறாகப் பேசியது விசாரணையில் உறுதியானது. இதுகுறித்து எம்எல்ஏ நயனா மோட்டம்மா கூறுகையில், ‘பெண்களின் ஆடையை வைத்து அரசியல்வாதிகள் திறமையற்றவர்கள் என முத்திரை குத்தும் மனநிலை மாற வேண்டும்’ என்று தெரிவித்தார். கைது செய்யப்பட்ட யக்ஷித் ராஜ் கடந்த 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Stories: