*ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு
திருமலை : ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது.
ஆந்திர மாநில செயலகத்தின் வீடியோ மாநாட்டு மண்டபத்தில் இருந்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் செயல்திறன் காட்டி, ஆர்டிஜிஎஸ், பட்டாதார் பாஸ்புக் விநியோகம் மற்றும் பிற பிரச்னைகள் குறித்து காணொலி மாநாடு மூலம் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
அப்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: ஆந்திர மாநில தலைநகரான அமராவதி மாநிலத்தின் மறுகட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும்.
அது உலகிற்கு ஒரு முன்மாதிரி நகரமாக மாறும். அமராவதி கட்டுமானத்திற்காக நிலம் சேகரிக்கும் முறையின் கீழ் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தாமாக முன்வந்தனர். சுமார் 29 ஆயிரம் விவசாயிகள் சுமார் 33 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்தது ஒரு முன்னோடியான உதாரணமாகும்.
மாநில வளர்ச்சியில் விவசாயிகள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இது ஒரு சான்றாகும். ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் அமராவதிக்கு எதிராக நதிக்கரை ஓரத்தில் இருப்பதாக பேசி வருகிறார். நாகரீகம் தோன்றியதே நதிக்கரை இருக்கும் இடத்தில் தான் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
குறிப்பாக விஜயவாடா, ராஜமுந்திரி, டெல்லி உள்ளிட்ட நகரங்கள் நதிக்கரை ஒட்டி தான் உள்ளது. ஆந்திர மாநில வளர்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகள் தடையாக இருந்ததோடு பின்னோக்கு வளர்சிக்கு கொண்டு சென்றனர். அதனை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்துள்ளோம்.
இந்த நேரத்தில் நீர் வளங்களை திறம்பட பயன்படுத்துவது முக்கியம். கோதாவரி நதியிலிருந்து சுமார் 3000 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் எந்தப் பயன்பாடும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் கடலில் சென்று கலக்கிறது என்பது எனது கவலை.
இந்த நீரை மாநிலத்தின் தேவைகளுக்குப் பயன்படுத்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஜூன் மாதத்திற்குள் புவியீர்ப்பு விசையின் கீழ் கிருஷ்ணா டெல்டாவிற்கு தண்ணீர் வழங்க ஏற்பாடுகள் முடிக்கப்படும். நீர் இணைப்புத் திட்டங்கள் நிறைவடைந்தால் பாசனப் பிரச்சினைகள் கணிசமாகக் குறையும்.
மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட தெலங்கானாவில் காலேஸ்வரம் போன்ற பெரிய திட்டங்கள் கட்டப்பட்ட போது ஆந்திரா அரசு சார்பில் எந்தத் தடைகளையும் உருவாக்கவில்லை.
இரு மாநிலங்களும் ஒரே மாதிரியான ஒத்துழைப்புடன் முன்னேற வேண்டும்.
தற்போது 88 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள போலவரம் திட்டத்தை விரைவில் முடிப்பதே அரசாங்கத்தின் குறிக்கோள். இந்தத் திட்டம் நிறைவடைந்தால், ஆந்திராவுக்கு மட்டுமல்ல, அண்டை மாநிலங்களுக்கும் தண்ணீர் வழங்கும் நிலையை மாநிலம் எட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திர அரசு லட்சியமாக முன்மொழிந்த போலவரம் – நல்லமலா சாகர் இணைப்புத் திட்டம் தொடர்பாக தெலங்கானா மாநில அரசு பிரச்சினை ஏற்படுத்துவது தெலுங்கு மாநிலங்களுக்கு இடையிலான நீர் தகராறு மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தத் திட்டத்தைத் தடுக்க தெலுங்கானா அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது என்றார்.
இந்தநிலையில் நல்லமல்லா சாகர் திட்டத்திற்கு தெலுங்கானா மாநில அரசின் ஆட்சேபனைகளை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி டெல்லி சென்றுள்ளார்.கடந்த விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முக்கிய பரிந்துரைகளை வழங்கியது.
நீர் தகராறுகளைத் தீர்க்க சட்டப் போராட்டங்களை விட பரஸ்பர பேச்சுவார்த்தைகள் மற்றும் மத்தியஸ்தத்தை மேற்கொள்வது நல்லது என்று இரு மாநிலங்களுக்கும் பரிந்துரைத்தது. இந்த சூழலில், அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் வரவிருக்கும் விசாரணையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி மாவட்டத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஸ்வர் பங்கேற்றார். இதில் தலைமைத் திட்டமிடல் துறையின் உதவி இயக்குநர் வெங்கடேஸ்வர்லு, ஏபிஐஐசி மண்டல மேலாளர் பரத் குமார் ரெட்டி, தொழில்துறை துறை ஜே.டி. சந்திரசேகர், கிராமம் மற்றும் வார்டு செயலக ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
கடலில் கலந்த 4,600 டிஎம்சி தண்ணீர்
ஆந்திர மாநில நீர்பாசன துறை அமைச்சர் நிர்மலராமாநாயுடு கூறுகையில், ‘போலவரம், நல்லமல்லா, சாகர் இணைப்பு திட்டத்திற்கு தெலங்கானா மாநில அரசு ஆட்சேபனை தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடலில் வீணாகி ஆண்டுக்கு 3,000 டிஎம்சி தண்ணீர் கலக்கக்கூடிய நிலையில் 200 டிஎம்சி தண்ணீரை மட்டுமே பயன்படுத்த உள்ளோம். கடந்த 50 ஆண்டுகளில் 1 லட்சத்து 53 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் கோதாவரி ஆற்றில் வீணாக கலந்துள்ளது. கடந்த ஆண்டு 4,600 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்தது என்பது குறிப்பிடக்கத்தது.
