பொங்கல் திருநாள் – 15.1.2026
1. தை பிறந்தால் வழி பிறக்கும்
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது நம்பிக்கை தரும் மங்கல வாழ்த்து.. இதோ, தை மாதம் பிறக்கப்போகிறது. நல்வழி பிறக்கப்போகிறது. மார்கழி மாதம் பக்தி மாதம். பக்தி மாதத்தின் பலன் தை மாதம் கைமேல் கிடைக்கும் என்றார்கள் பெரியவர்கள். அதனால்தான் தைமாதம் முதல் தேதியே புதுப்பானையில் பொங்கல்வைத்து, பால் பொங்கல் பொங்குவது போலவே, நம்முடைய மனதும் இல்லமும் பொங்க வேண்டும் என்று பொங்கலோ பொங்கல் என்று விண்ணதிர ஆரவாரத்தோடு குரல் எழுப்பி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்.
இந்த ஆண்டு மகர சங்கராந்தி எனும் பொங்கல் பண்டிகை 15.1.2026 ,குருவாரமாகிய வியாழக்கிழமை, துவாதசி திதியோடு கூடிய நாளில் பிறக்கிறது. அன்றைய தினம் முழுக்க பெருமாளுக்குரிய கேட்டை நட்சத்திரம் இருக்கிறது. காலை 9 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் கும்ப லக்கினத்தில் புதுப்பானை வைத்து பொங்கல் செய்யலாம்.
2. தை மாதத்தின் சிறப்பு
தை மாதத்திற்கு என்ன சிறப்பு என்று பார்க்க வேண்டும்? இதைத் தெரிந்து கொண்டால்தான் அன்று ஏன் பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம் என்பது தெரியும். தை மாதம் என்பது தட்சிணாயன கதி முடித்து சூரியன் உத்தராயண கதிக்குத் திரும்புகின்ற நாள். இனி ஆறு மாதம் அவர் உத்தராயன கதியில் தான் பயணிப்பார். உத்தராயணம் என்பது சாஸ்திர ரீதியாக மோட்ச வழியாகக் கருதப்படுகிறது.
தட்சணாயன காலத்திலே அடிபட்டு அம்புப் படுக்கையில் விழுந்த பீஷ்மர், உத்தராயண காலம் வரட்டும் என்று காத்திருந்தார். தை மாதம் பிறந்தவுடன் தன்னுடைய இன்னுயிரை நீக்கி, ஜோதி ஆகி மேலுலகம் சேர்ந்தார். எனவே உத்தராயண காலம் புனிதமான காலமாகக் கருதப்படுகிறது. உத்தராயண முதல் நாள் என்பதால், அதை வரவேற்பதற்கு பொங்கல் வைத்து பண்டிகை கொண்டாடுகிறோம். அன்றைய தினம் குலதெய்வத்துக்கும் சூரியனுக்கும் வழிபாடு நடத்துவது சாலச் சிறந்தது.
3. உத்தராயண புண்ணிய காலம்
உத்தரம் என்றால் வடக்கு என்று பொருள். அயணம் என்றால் பயணம். சூரியன் வடக்கு திசையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் நாள். உத்தராயணம் முதல் நாள் கடவுளின் நாள் என்று கூறப்படுகிறது. அதனாலேயே இதை உத்தராயண புண்ய காலம் என்று அழைக்கிறார்கள்.
எனவே, புதிய வேலை, திருமணம் போன்ற மங்கல காரியங்களை இம்மாதத்தில் தொடங்குவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. திருக்குடந்தை, திருவெள்ளறை போன்ற சில வைணவத் திருத்தலங்களில் பெருமாளின் கருவறைக்கு உத்தராயண வாசல், தட்சிணாயண வாசல் என இரு வாசல்கள் இருப்பது வழக்கம். உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும், தட்சிணாயன காலத்தில் தட்சிணாயண வாசலும் திறந்திருக்கும்.உத்தராயண புண்ய காலத்தின் தொடக்க நாளான தை மாத முதல் நாளன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.
4. சூரியனைக் கொண்டாடும் நாள்
பொங்கல் பண்டிகை சூரிய பகவானைக் கொண்டாடும் பண்டிகை. சூரியன் தான் இந்த உலகத்திற்குத் தாய். காரணம், சூரியனிலிருந்து பிறந்ததுதான் பூமி முதலிய கிரகங்கள். எனவே பூமிக்குத் தாய் சூரியன். நாம் உயிர் கொடுத்த தாயைக் கொண்டாடுவது போல, எல்லோருக்கும் உயிர் கொடுத்த தாயான சூரியனைக் கொண்டாடுகிறோம்.
எல்லா உயிர்களின் வளர்ச்சிக்கும் ஆதார மாக விளங்கக்கூடிய சூரியனை கொண்டாடுவதற்கான நாள் தை மாதம் ஒன்றாம் நாள். 12 தமிழ் மாதங்களில், மாதப் பிறப்பை சிறப்பாக கொண்டாடப்படும்படியான மாதங்கள் இரண்டு. ஒன்று சித்திரை மாதம். தமிழ் வருடப் பிறப்பாக கொண் டாடப்படுகிறது. அடுத்து தை மாதம். தைத்திருநாள் உலகம் முழுக்க பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
5. ஞாயிறு போற்றுதும்
டிசம்பர் 21-ஆம் நாளன்று, சூரியன் மகரரேகையின் மீது இருக்கிறது. அந்த நாளிலிருந்து சூரியோதயத்தையும், சூரியனின் இடப்பெயர்ச்சியையும் கவனித்தால், மெல்லமெல்ல, அது தினமும் வடக்குத் திசைக்கு மாறும்..அப்படி மாறும் நாளை வரவேற்பதற்காகத் தான் பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம்.
“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்”
என்று சிலப்பதிகார ஆசிரியர் சூரிய பகவானைப் போற்றுகின்றார். எல்லா இலக்கியங்களும் சூரிய பகவானின் பெருமையைப் போற்றுகின்றன. சூரியன் இல்லாவிட்டால், உயிர்கள் இல்லை பயிர்கள் இல்லை உலகமே இல்லை.
6. மாதங்களின் பிறப்பு
உத்தராயணம், ஞானமடைதலுக்கானது. இது உள்வாங்குதலுக்கான காலம், அருளைப் பெறுவதற்கும் ஞானமடைவதற்கும் உகந்தது, மற்றும் உச்சபட்ச தன்மையை எட்டுவதற்கான காலம். இந்த நேரத்தில் விவசாய அறுவடையும் நடைபெறுகிறது. பொங்கல் என்பது அறுவடைத் திருநாள். உணவு தானியங்களை அறுவடை செய்வதற்கான காலம் மட்டுமன்றி, மனித ஆற்றலை அறுவடை செய்வதற்கும் உகந்த காலமாக இருக்கிறது. 12 மாதங்களில் சித்திரை மாதமும் தை மாதமும் விசேஷம். சித்திரை மாதத்தில் சூரியன் உச்சமடைகிறார். தை மாதத்தில் சூரியன் கதி மாறுகிறார்.
எனவே இரண்டு நிலைகளும் சூரியனை அடிப்படையாக வைத்துக்கொண்டு கொண்டாடப்படுகின்றன.சித்திரை ,தை இரண்டு மாதங்களின் பிறப்பும் பண்டிகைகளாகக் கொண்டாடப்பட்டாலும், தை மாதப்பிறப்பு ஒட்டிய பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாக தொடர்ந்து கொண்டாடப்படுவது சிறப்பாகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
7. அறுவடைத் திருநாள்
நாம் பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடும் திருநாளை தமிழ் நாட்டுக்கே வெளியே மற்ற மாநிலக் காரர்கள் மகர சங்கராந்தி என்று வைதீகத் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் எல்லோருமாகச் சேர்ந்து பொதுவில் கொண்டாடுவது அறுவடை திருநாளாகத்தான். நம் நாடு விவசாய நாடு அல்லவா. விதைத்த பயிர் முளைத்து அதன் பலனாகிய அறுவடை செய்து நலம் பெறுவதால் தை மாதத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஒரு விவசாயியின் வயிற்றில் பாலை வார்க்கும் நாள் தை முதல் நாள் என்பதால், விவசாயிகள் இந்த நாளை இயல்பாகவே சிறப்பான நாளாகக் கொண்டாடுவார்கள்.
8. முத்துச் சம்பா நெல்லு குத்தி முத்தத்திலே சோறு பொங்கி
தை திருநாள் எப்படிக் கொண்டாடப்பட்டது என்பதை சொல்லும் பாடல் இது.
அந்தப் பண்டிகையின் சிறப்பை மிக எளிமையாக விளக்குகிறது.
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம் (தை)
ஆடியிலே வெத வெதைச்சோம் தங்கமே தங்கம்
ஐப்பசியில் களை எடுத்தோம் தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கழனி யெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம் (தை)
கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணம் ஆகுமடி தங்கமே தங்கம்
வண்ண மணிக்கைகளிலே தங்கமே தங்கம்
வளையல்களும் குலுங்குமடி தங்கமே தங்கம் (தை)
முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
குத்து விளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம் (தை)
1958ம் வருடம் வந்த தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் அ .மருதகாசி இந்த பாடலை இயற்றியிருக்கிறார்.
9. எல்லா ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள்
ராசிகள் 12. இதை நெருப்பு ராசி, நில ராசி, காற்று ராசி, நீர் ராசி என்று பிரித்திருப்பார்கள். தை மாதத்திற்குரிய மகர ராசி நில ராசி. நிலம் செழிப்பாக இருந்தால்தான் பயிர்களின் வளம் சிறப்பாக இருக்கும். இந்த நில ராசியில் சூரியன் நுழையும் காலம்தான் மகர சங்கராந்தி தினமாகக் கொண்டாடப்படுகிறது. சங்கராந்தி என்றால் சங்கமித்தல். அந்தி என்பது ஒரு மாதத்தின் முடிவில் மற்றொரு மாதத்தின் தொடக்கம் வரும் காலம்.மார்கழி மாதத்தில் முடிவும்,தை மாதத்தின் தொடக்கமும் நிகழும் நாளை, மகர சங்கராந்தி என்று சொல்லுகிறோம்.ஆகம விதிகளின்படி, இது புனிதமான நாள் என்பதால், எல்லா ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
10. சங்கராந்தித் திருவிழா
வைணவ ஆகமத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் பெருமாளுக்கு ஒரு பெயரும் உருவமும் உண்டு. தை மாதத்திற்கு உரிய தேவதை நாராயணன். நிறம் நீலம். ஆயுதம் 4 சங்குகள். திசை மேற்கு. பெருமாள் ஆலயங்களை போலவே, சிவாலயங்களிலும் தை முதல் நாள் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். 1008 குடங்களில் நீர் நிரப்பி அபிஷேகம் செய்ததாக குறிப்புகள் உண்டு.செம்பியன் மாதேவியார் இந்த நாளில் பல ஆலயங்களிலும் வழிபாடு நிகழ்த்தியுள்ளார். அக்காலத்தில் சோழ மன்னர்கள் தை முதல் நாள் அன்று சிவாலயங்களில் விசேஷமான வழிபாடுகள் நடத்தியதற்காக கல்வெட்டுக்கள் உள்ளன.திருவண்ணாமலை ஆலயத்தில் மகர சங்கராந்தித் திருவிழா 10 நாட்கள் சிறப்பு உற்சவமாகக் கொண்டாடப்படுவது குறித்த கல்வெட்டுகள் உண்டு.
11. நான்கு நாள் பண்டிகை
மாதத்தின் கடைசி நாளும் அடுத்த மாதத்தின் தொடக்க நாளும் இணைந்து பண்டிகை நாள்களாக மலர்வது தைப்பொங்கல் திருநாளில் தான். மார்கழி மாதத்தின் கடைசி நாள் தைப்பொங்கல் திருநாளுக்கு முகவுரைத் திரு நாளாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. முதல் நாள் பண்டிகை போகிப் பண்டிகை என்று மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடுவார்கள்.
அதற்கு அடுத்த நாள் தை மாதப் பிறப்பு.பொங்கல் பண்டிகையாக சூரிய வழிபாடு நடத்துவார்கள். அதற்கடுத்த நாள் மாட்டுப்பொங்கல் என்று விவசாயிகள் கால்நடைகளுக்கு பூஜை செய்து பண்டிகை கொண்டாடுவார்கள். அதற்கடுத்த நாள் காணும் பொங்கல் என்ற பண்டிகையாகக் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு பண்டிகைக்கும் பின்னணிக் காரணங்களும் ஆன்மீகச் சிறப்புகளும்வாழ்வியல் தத்துவங்களும் உண்டு.
12. போகிப்பண்டிகை
இந்த ஆண்டு போகிப் பண்டிகை 14.1.2026 புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அன்று ஏகாதசி திதி. மார்கழி மாதத்தின் நிறைவு நாள். பல கோயில்களிலே திருப்பாவை சாற்று முறை (பூஜை நிறைவு செய்தல் )நடத்துவார்கள். ஆண்டின் கடைசிநாள் என்பதால், நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருட்கள் (எண்ணங்கள்) அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.பழந்துயரங்களை அழித்துப் போக்கும் பண்டிகை போகிப் பண்டிகை . போகி அன்று, வைகறையில் ‘நிலைப்பொங்கல்’ வைக்கப்படும்
13. துயரங்களைப் போக்கும் போகிப்பண்டிகை
“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில”என்பதற்கேற்ப பழைய பொருள்களை எல்லாம் தீயிலிட்டு பொசுக்க வேண்டும்.தீயில் போட்டால் எதுவும் மிச்சமிருக்காது அல்லவா. (அன்று டயர்கள் போன்றவற்றை எரித்து சுற்று சூழலை மாசு படுத்தக்கூடாது.) பொருள்கள் என்பது தீய எண்ணங்களையும், நடந்துபோன துயரமான நிைனவுகளையும் சேர்த்துதான் . உறவுகள் மனக்கசப்பு நீங்கி ஒன்றாக வேண்டும்.போக்கி என்ற சொல்லே நாளடைவில் மருவி ‘போகி’ என்றாகிவிட்டது.
14. கோவிந்தராஜப் பெருமாளுக்கு பட்டாபிஷேகம்
“போகி” என்பது இந்திரனின் பெயர்.கண்ணபிரான் அவதார காலத்தில் மழை வேண்டி இந்திரனுக்கு பூஜை செய்ய வேண்டும் என்று ஆயர்பாடியில் அனைவரும் விரும்பினார்கள். அப்போது கண்ணன், “சூரியன், இந்திரன், வாயு முதலிய அனைத்து தேவர்களும் ஸ்ரீமந்நாராயணனுக்குக் கட்டுப்பட்டவர்கள். எனவே இந்திரனுக்கு பூஜை செய்வதை விட, நமக்கு மழையைத் தருவதும், பசுக்களுக்கு நல்ல தழைகளைத் தருவதுமாகிய இந்த மலைக்கு பூஜை போடலாம்” என்று சொன்னான்.
கோவர்த்தனகிரியாகிய மலைக்கு பூஜை செய்ய, கோபம் கொண்ட இந்திரன், கடுமையான மழை பொழிய, தன்னை நம்பிய ஆயர்களையும் பசுக்களையும் காப்பதற்காக கோவர்த்தனகிரியை குடையாய் பிடிக்கிறான் என்பது பாகவத புராணம் .கண்ணனுடைய பெருமைகளை உணர்ந்த இந்திரன், இறுதியாக கண்ண னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, கோவிந்தராஜ பட்டாபிஷேகம் செய்கின்றான்.எனவே போகிப் பண்டிகை என்பது கோவிந்த பட்டாபிஷேக நாள் என்று வைணவ ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது.குறிப்பாக சிதம் பரத்தில் உள்ள ஆலயத்தில் அன்று கோவிந்தராஜப்பெருமாளுக்கு பட்டாபிஷேகம் செய்யப்படுகிறது.
15. ஆண்டாள் திருக்கல்யாணம்
மார்கழி மாதம் முழுக்க ஆண்டாள் மார்கழிநோன்பு நோற்றாள் . மார்கழி நோன்பின் காரணம், கண்ணனை அடைய வேண்டும், கண்ணனை தரிசிக்க வேண்டும் என்பது. இறைவனாகிய கண்ணனைச் சந்திப்பதற்காகக் பாடிய தமிழ் “திருப்பாவை” என்பதால், இதனை சங்கத்தமிழ் என்று சொல்வார்கள். மார்கழி மாதத்தில் நிறைவு நாளான போகிப்பண்டிகை அன்று கண்ணன் ஆண்டாளுக்கு காட்சியளித்தான். ஆண்டாள் விரும்பிய வண்ணம் அவளைத் திருமணம் செய்து கொண்டான் . எனவே போகிப்பண்டிகை ஆண்டாள் திருக்கல்யாண நாளாக இப்பொழுதும் பல வைணவ ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது.
16. போகிப்பண்டிகை எப்படிக் கொண்டாடுவது?
போகிப்பண்டிகை அன்று அதிகாலை நீராடி பல்வேறு காய்கறிகள் சமைக் கப்பட்ட உணவை பகவானுக்கு நிவேதனம்செய்ய வேண்டும். போகி அன்று, வைகறையில் ‘நிலைப்பொங்கல்’ வைக்கப்படும்.. வீட்டின் முன் வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும் பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங் குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வணங்குவர். அன்று போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.பிறகு அனைவரும் உண்டுகளிக்க வேண்டும்.
17. சங்க இலக்கியங்களில் தை நீராடல்
உத்தராயண புண்ணிய காலத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவதும், திருக் கோயில்களில் வழிபாடு நடத்துவதும் பல்வேறு தான தர்மங்களைச் செய்வதும் , காலம் காலமாகச் செய்யப்பட்டு வருகின்றது. சங்க இலக்கி யங்களில் தை மாதம் முதல் நாள் நோன்பிருந்து நீராடுவதை “தை நீராடல்” என்று மக்கள் அழைத்தனர். வைகை நதியில் அக் காலத்தில் மக்கள் நதி நீராடியதைப் பற்றிய பல குறிப்புகள் பரிபாடலில் உள்ளன.நற்றிணை , குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை (“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ”) முதலிய இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை பற்றிய பல குறிப்புகள் இருக்கின்றன.
18. திருப்பாவையில் பொங்கல்
ஆண்டாள் நாச்சியார் நம்முடைய திருப்பாவையில் விவசாயத்தின் பலனைச் சொல்லுகிறாள். எப்படி நிலங்கள் செழித்து இருக்க வேண்டும்? பசுமாடுகள் எப்படி வளமையோடு இருக்க வேண்டும் என்பதை தம்முடைய மூன்றாவது பாடலில் தெரிவிக்கிறாள்.
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
என்பது பாசுரத்தில் பகுதி. இந்தப் பாசுரம் காட்டும் நிகழ்வினைத் தான் பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடுகிறோம்.
19. நிலமும் பசுவும்தான் நீங்காத செல்வம்
ஆண்டாள் காட்டுகின்ற வயற்காட்சி அற்புதமான காட்சி. வயல்களில் நெற் கதிர்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான தானிய மணிகளுடன் ஓங்கி வளர்ந்திருக்கிறதாம்.. இதனை “ஓங்கு பெருஞ் செந்நெல்” என்ற பதத்தால் குறிப்பிடுகின்றார். நம்மாழ்வாரும் காவிரி நிலவளத்தை குறிக்கும் போது “சீரார் செந்நெல் கவரி வீசும் திருக்குடந்தை” என்று பாடுகிறார். அப்படி வளர்ந்த நெற்கதிர்கள் கீழே ,வயலின் சேற்றில், கயல் மீன்கள் ஒரு கதிரிலிருந்து இன்னொரு கதிருக்கு இடையில் மாறி மாறிக்குதித்துச் செல்கிறதாம்.. இதற்கு நடுவிலே ஊடுபயிராக பூங்குவளை மலர்கள் பூத்துக் குலுங்கு கின்றதாம்..
ஒவ்வொரு மலரிலும் ஏராளமான தேன் இருப்பதால், ஒரு துளி தேனுக்காக பல மலர்களுக்குத் தாவித் தாவிச் செல்லும் பொறி வண்டுகள் ஒரே மலரில் இத்தனைத் தேன் இருப்பதால், வயிறாரக் குடித்துவிட்டு, உண்ட மயக்கத்தோடு அந்த மலரிலே உறங்குகிறதாம்.. பசுமையான வயல் வெளியிலே பசு மாடுகள் மேய்வதால் மடி கனத்து , படிப்படியாய் பால் கறக்கிறதாம்.. இனி வைப்பதற்கு பாத்திரம் இல்லை என்ற அளவுக்கு பால் வளம் சிறந்து விளங்குகின்றதாம்.
ஒரு நாட்டின் வளமையை வயல் வளமும், பசு வளமும் காட்டுகிறது. இதில் வயல் வளத்துக்காக சூரியனைக் கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகை. பசு வளத்துக்காகக் கொண் டாடும் பண்டிகை மாட்டுப்பொங்கல். . இந்த இரண்டின் மகிழ்ச்சியோடு ஒரு வரை ஒருவர் பார்த்துக்கொண்டாடும் பண்டிகையாக மலர்வது காணும் பொங்கல் பண்டிகை.
20. நெற்கதிர் தோரணம்
பொங்கல் பண்டிகை அன்று, அறுத்த நெற்கதிர்களை வீட்டுக்கு எடுத்து வருவர். அக் கதிர்களை பகவானுக்குப் படைத்து, வீட்டின் வாயில் நிலைப்படியில் மேல், பசுஞ்சாணம் கொண்டு ஒட்டி வைப்பர். அதில் மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, பூஜை செய்வர். அதைப்போலவே அதை அழகான வளையமாகக் கட்டி,தூக்கு கூடு போல வீட்டில் தொங்க விடுவதும் உண்டு. இன்றும் கிராமத்து பழைய வீடுகளில் மரத்தூண்களின் மேல் நெல்மணிக்கதிர்களால் கட்டப்பட்ட பிரிமணை வளையங்களை பார்க்கலாம். அதிலே இருக்கிற தானியங்களை பறவைகள் சிட்டுக்குருவிகள் வந்து உண்டு மகிழும். அந்தப் பறவைகள் சத்தம் வீடுகளில் கேட்கும் பொழுது மங்களங்கள் பெருகும்.
21. சூரியனுக்கான திருவிழா
தைப்பொங்கல் பண்டிகை சூரியனுக்கான திருவிழாவாகக் கொண்டாட ப்படுகிறது. சூரியன் வேதகால கடவுள். பகவான் ஸ்ரீமன் நாராயணன் கண்ணிலிருந்து சூரியன் பிறந்தான் என்று ரிக் வேதம் சொல்லுகின்றது. (சஷூ ஸூர்யோ அஜாயதா -புருஷ சூக்தம்) வேதங்களால் போற்றப்படும் சூரிய பகவானுக்கு உரிய விழாவாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.விஷ்ணு புராணத்தின் படி 12 ஆதித்யர்கள் உள்ளனர். அவர்கள், அம்சன், ஆர்யமான், பாகன், துத்தி, மித்திரன், புஷன், சக்ரன், சாவித்திரன், துவச்த்திரன், வருணன், விஷ்ணு, விவஸ்வத் ஆகியோராகும். மற்ற புராணங்களில் யமன், வருணன், இந்திரன் போன்றோரும் ஆதித்யர்கள் என்று கூறப்பட்டுள்ளது. பொங்கல் முதல் நாள்பண்டிகையில் இந்த ஆதித்யர்களுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.
22. சூரிய வழிபாடு
ஆறு சமயங்களில் சூரியனை முதன்மைக் கடவுளாக கொண்ட சமயம் சௌரம். அக்காலத்தில் சூரியனுக்குத் தனிக் கோயில் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சூரியனுக்கு தமிழ்நாட்டில் சூரியனார் கோயிலும் ஒரிசா ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தனிக் கோயில்களும் உண்டு. சூரியனால் தான் பயிர்களும் உயிர்களும் செழித்து வளர்கின்றன. சூரியனால்தான் கிழமைகள் ஏற்படுகின்றன. கிழமைகள் ஏழு குறிக்க ஆதித்யன் தனது ரதத்தில் ஏழு குதிரைகளை பூட்டி உள்ளான்.. நம் உடலில் தோல், எலும்பு, சதை, ரத்தம் என்ற ஏழு தாதுக்கள் உள்ளன. இவற்றோடு சஞ்சரிக்கும் ரதமே இந்த உடம்பு. இவற்றை இயக்குவது சைதன்ய ஆதித்யன். சாஸ்திரத்தில் மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரம் வரை நகரும் ஏழு சக்கரங்களே ஏழு குதிரைகள்.
வேதங்களால் போற்றப்படும் சூரியசக்தியின் உருவம்தான் ஏழு குதிரைகள். சூரியனின் மறுபெயரான ரகு என்பதிலிருந்து ரகு வம்சம் என்று இந்த வம்சம் அழைக்கப்பட்டது.இந்த வம்சத்தில் பிறந்தவராக பகீரதனும், ராமரும் புகழ்பெற்றவர்கள். கலிங்கத்துப் பரணியில் வரும் சோழர் வம்ச வர்ணனை சோழர்களின் முன்னோர்களாக சூர்யவம்ச மன்னர்களையே குறிப்பிடுகின்றன.
23. பொங்கலோ பொங்கல்
பொங்கலன்று அதிகாலை எழுந்து , வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் புதுப்பானையில் புது அரிசியிட்டு, முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு.
24. வழுக்கையான தேங்காயை படைப்பது உசிதம்
முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். பால் பொங்கும் போது மணியோசை எழுப்பி பொங்கலோ பொங்கல் என்று உரக்க எல்லோரும் சேர்ந்து உற்சாகத்தோடு சொல்ல வேண்டும். பெண்கள் குலவை இடுவதும் உண்டு. சூரிய பகவானுக்கு பல்லில்லாத கிரகம் என்று ஒரு பெயர் உண்டு .அதனால் அவருக்கு பொங்கல் திருநாளில் வழுக்கையான தேங்காயை படைப்பது உசிதம் என்று எழுதி இருக்கிறார் மகாபெரியவர் .அந்த வகையில் இளநீர் பாயாசம் வைத்து தைத் திருநாளில் படைக்கலாம். பொங்கலன்று காய்கறி கலந்து சாதங்கள் செய்து படைக்க வேண்டும். மண் பாண்டத்தின் பெருமையைச் சொல் வதற்காகவே அறுவடைத் திருநாளில், புது மண் பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைக்கிறார்கள்.
25. மகரஜோதி
தை மாத முதல் நாளின் மற்றொரு சிறப்பு மகர ஜோதி . மகர சங்கராந்தி தினமான தை மாதம் 1ஆம் தேதி மாலையில் சூரியன் மறையும் நேரத்தில், வானில் தோன்றும் ஒரு புனிதமான நட்சத்திரம் என்கிறார்கள் . மற்ற நாட்களில் அது தெரியாது. சபரிமலையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் பொன்னம்பல மேடு இருக்கிறது. இங்கு கண்ணுக்குத் தெரியாத பொற் கோவிலில் சாஸ்தாவான ஐயப்பன் தியானத்தில் இருப்பதாகவும், இவர் தை மாதத்தில் வரும் மகர சங்கராந்தி நாளில் மட்டும் பேரொளியாய்த் தோன்றிப் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மகர விளக்கு என்பது மகர சங்கராந்தி தினத்தன்று மாலை நேரத்தில் காட்டில் குடியிருந்து வரும் ஆதிவாசிகள், ஐயப்பனுக்காக பொன்னம்பல மேட்டில் காட்டும் கற்பூர ஆரத்தி என்றும் சொல்கிறார்கள்.எப்படி ஆயினும் இது சிறப்பான புனிதமான நிகழ்ச்சி.10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசிக்கும் நிகழ்ச்சி. இதற்காக முதல் நாள் மாலை பந்தள அரண்மனையில் இருந்து ஆபரணப்பெட்டியில் கொண்டு வரப்பட்ட தங்க ஆபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக் கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும்.
26. மாட்டுப் பொங்கல்
தைப்பொங்கலை வரவேற்கும் தைப்பாவை நூலில் கவியரசு கண்ணதாசன் ஆரம்பிக்கும்போதே காளை மணியோசை என்று மாட்டின் பெருமையைச் சொல்லித்தான் ஆரம்பிப்பார்..
காளை மணியோசை களத்துமணி நெல்லோசை
வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை
தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை
கோழிக்குரலோசை குழவியர்வாய் தேனோசை
ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமாய்
வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ
தோழியர் கைதாங்க தூக்கியபொன் அடிநோக
மேழியர்தம் இல்லத்து மேலழுவாய் தைப்பாவாய்
உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே மாட்டுப்பொங்கல்நாளாகும்.
27. பட்டி பெருக! பால் பானை பொங்க!
மாட்டுப் பொங்கல் அன்று கோ பூஜை செய்ய வேண்டும்.மதுரை மாவட்டத்தில் பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு உண்டு.மாட்டுப்பொங்கல் பட்டிப் பொங்கல் அல்லது கன்று பொங்கல் என்றும் சொல்வது உண்டு. மாடுகள் மற்றும் கன்றுகளின் தொழுவம் சுத்தம் செய்யப்பட்டு, மாடுகளை குளிப்பாட்டி அவற்றின் கொம்புகளில் வண்ணம் பூசி அலங்கரித்து, சலங்கை கட்டி விடுவார்கள். மேலும் அவற்றுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்பு கயிறு உள்ளிட்டவற்றையும் அணிவித்து மாடுகளையும், கருவிகளையும் வழிபடுவார்கள். ’’பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
28. காணும் பொங்கல்
பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் விழா காணும் பொங்கல் . காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் இடம் பெறும் விழா. பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக் கொள்வார்கள்.கணுப்பிடி இந்நாளின் சிறப்பு. இது ஒருவகை நோன்பு. உடன் பிறந்த சகோதரர்களுக்காக பெண்கள் செய்யும் நோன்பு.
காணும் பொங்கல் அன்று காக்கைக்கு அன்னமிட வேண்டும் .இப்படிச் செய்தால் அந்த வருடம் முழுவதும் வளமோடு வாழலாம். ஆன்மீக ரீதியில் பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தி, மாலையில் குதிரை வாகனத்தில் புறப்பாடு செய்வார்கள். மாடு விரட்டுதல் பார்வேட்டை உற்சவம் நடைபெறும். அவர் பசு மாட்டுக்கூட்டத் தினை மேய்ப்பவராக ஒரு பாவனை செய்யப்படும். சில கோயில்களில் ஆற்றுத் திருவிழாவும் நடைபெறும்.
29. ஆற்றங்கரை திருவிழா
காணும் பொங்கல் அன்று சுவாமி தீர்த்தவாரிக்கு ஆற்றங்கரைக்கு வருவதோடு, மக்கள் குதூகலமாக பல விதமான விளையாட்டுக்களை விளை யாடுவார்கள். பெண்கள் கும்மி கோலாட்டம் முதலியவற்றை விளையாடுவார்கள். ஒருவரை ஒருவர் இணைந்து மகிழ்ச்சியைத் தரும் திருநாளாக காணும்பொங்கல் அமைந்திருக்கிறது. தை மாதம் 5ம் நாள் ஆற்றுத் திருவிழா என்று தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலும் விழுப்புரம் மாவட்டத் திலும் கொண்டாடப்படுகின்றது.இது மிகச் சிறப்பான திருவிழாவாகும்.
கடலூர்மற்றும் அருகிலுள்ள பகுதிகளான கடலூர் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், தாழங்குடா, குண்டு உப்பலவாடி, ஆனைக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், நானமேடு, உச்சிமேடு, கடலூர் துறைமுகம், வண்டிப்பாளையம், புருகீஸ் பேட்டை, தேவனாம்பட்டி, புதுச்சேரி கன்னியகோயில்ஆகிய இடங்களில் உள்ள அம்மன், முருகன், விநாயகர், பராசக்தி கோயில்களைச் சேர்ந்த அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொண்டாடப்படுகிறது.
30. கரும்பு வைத்து படைக்க வேண்டும்
பொங்கலை ஒட்டி முன்னோர்கள் பூசையும் செய்வது உண்டு. குறிப்பிட்ட தலங்களில் இந்தப் பூஜையைச் செய்வது விசேஷம். திருவலஞ்சுழியில் உள்ள ஸ்ரீ வேத விநாயகர் கோயில். தை முதல் நாளன்று இங்குள்ள தீர்த்தத்தில் தர்ப்பண வழிபாடுகளைச் செய்வதால் பலவிதமான தொந்தரவுகள் நீங்கும். சூரியக் கோயில்கள் அமைந்துள்ள சிவாலயங்களில் மூலவருக்கு சிவப்பு பட்டு வஸ்திரம் சாத்தி சிவனை வழிபட வியாபாரம் முதலியவை நல்ல முறையில் நடக்கும்.
தொழில் அபிவிருத்தி அடையும். பித்ரு சாபங்கள் தீரும்.பொங்கலுக்கு கரும்பு வைத்து படைக்க வேண்டும். கரும்பு அற்புதமான உணவுப்பொருள் மட்டுமல்ல மருந்துப் பொருளும் கூட. கரும்பில் உள்ள இனிப்பு மிக அற்புதமானது .உடலுக்கு தேவையான கால்சியம், இரும்பு ,மெக்னீஷியம் ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. நோய் எதிர்ப்புச்சக்தி நிறைந்த பொருளும் கரும்பில் இருக்கிறது. அது உடலுக்கு உறுதியை தருவதோடு , உடல் சூட்டை குறைக்கும் குணம் கொண்டதாக இருக்கிறது.
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில். மிகப் பிரதானமான இக்கோயிலில் பொங்கல் அன்று கைலாய வாயில் திறக்கப்படுகிறது. பொங்கலன்று சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் ராஜகோபுரத்தின் வழியாக கோயிலுக்கு திரும்பும்பொழுது கைலாய வாயில் வழியாக கோயிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்ய வேண்டும்.இந்த விழாவிற்கு சொர்க்கப் பாதை விழா என்று பெயர்.
பூசணி தமிழ் நாட்டுக்கே உரிய ஒரு அற்புதமான தாவரம். மார்கழி தை மாதங்களில் அதிகம் விளையும். இந்த பூசணிப்பூ ஆன்மீகச் சிறப்பு வாய்ந்தது. இந்திரனுக்கு இந்த பூசணிப்பூ மிகவும் பிடிக்கும். பொங்கலின் போது பெரிய சல்லடையில் பூசணி இலைகளில் பொங்கலை வைத்து படைக்கும் வழக்கம் உண்டு. இந்திரனுக்குரிய விழாவாக இந்த விழா இருப்பதால் அவருடைய ஆயிரம் கண்ணுக்கு நிகராக சல்லடையை பயன்படுத்துகின்றனர்.இன்னும் ஏராளமான செய்திகள் உண்டு.அதில் ஒரு சில தான் இந்த முத்துக்கள் முப்பது.
எஸ். கோகுலாச்சாரி
