*மாணவர்கள் போராட்டம்
புதுக்கோட்டை : புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட அனுமதி மறுத்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயில் முன்பு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லூரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து துறை மாணவர்களும் ஒருங்கிணைந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி வந்துள்ளனர். இந்த ஆண்டும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட மாணவர்கள் அனுமதி கேட்டுள்ளனர்.
இதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை சமத்துவ பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் தன்னாட்சி கல்லூரியாக திகழும் அரசு மன்னர் கல்லூரியில் மட்டும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட அனுமதி மறுக்கப்படுவது ஏன்.
உடனடியாக தங்களுக்கு சமத்துவ பொங்கல் விழாவை கல்லூரிவளாகத்தில் கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி நுழைவு வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினுடன் இணைந்து கல்லூரியில் பயிலும் மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமத்துவ பொங்கல் விழா கொண்டாட அனுமதி அளிக்கும் வரை நாங்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
