×

மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்

மாதவரம், ஜன.12: மாதவரம் மற்றும் மணலி ஏரியை ரூ.18.78 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து சுற்றுலாத்தலமாக மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டு அதற்கான பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்படி இரண்டு ஏரிகளிலும் தூர்வாரி, கரை அமைத்து, நடைபாதை, சிறுவர் பூங்கா, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், அலங்கார முகப்பு, பார்க்கிங் போன்ற பல்வேறு அம்சங்களுடன் பசுமை பூங்காவாக அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

மேலும் மாதவரம், மணலி ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்றவும் அங்கு படகு சவாரியை துவக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இதற்கான பணிகள் கடந்த சில தினங்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக மோட்டார், பெடல் போன்ற 30க்கும் மேற்பட்ட நவீன படகுகளும் இங்கு கொண்டுவரப்பட்டு சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்டு மாதவரம் மணலி ஏரியை நாளை (13ம் தேதி) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த பணிகளை மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏரியில் செய்யப்பட்டிருக்கும் புனரமைப்பு மற்றும் அழகுப்படுத்தும் பணிகள், படகு சவாரியின் போது பொதுமக்களுக்கான பாதுகாப்புகள் குறித்து உதவி ஆணையர் தேவேந்திரன், செயற்பொறியாளர் ஆனந்தராவ் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் படகு சவாரியை துவக்கும் வகையில் அனைத்து பணிகளையும் சிறப்பாகவும், துரிதமாகவும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், கவுன்சிலர் சந்திரன் மற்றும் சென்னை மாநகராட்சி, சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Manali Lake, Matavaram ,Madhavaram ,Chennai Municipality ,Manali Lake ,
× RELATED பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம்...