×

ஊழியரின் மாத ஊதிய வரம்பை ரூ.25 ஆயிரமாக உயர்த்த திட்டம்: வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் தகவல்

வேலூர், ஜன.12: இபிஎப் திட்டத்தில் சேரும் ஊழியரின் மாத ஊதிய உச்சவரம்பை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படலாம் என்று வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினராக சேரும் தொழிலாளர் அல்லது ஊழியரின் மாத ஊதிய உச்ச வரம்பு கடந்த 2014ம் ஆண்டு ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. ஊழியர் தானாக முன்வந்து அதிக பங்களிப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே பங்களிப்பு அதிகரிக்கிறது. இந்த ஊதியத்தில் நிறுவனம் அளிக்கும் 12 சதவீத பங்களிப்பில், 8.33 சதவீதம் ஊழியர் ஓய்வூதியத்திட்டத்திற்கும், மீதமுள்ள 3.67 சதவீதம் ஊழியரின் இபிஎப் கணக்கிற்கும் செல்கிறது. இந்த நிலையில் இபிஎப் நிறுவனம் தங்களுக்கும் ஊழியர்கள், நிறுவனங்கள் ஆகியோருக்கு இடையே உள்ள பரிமாற்ற நடவடிக்கைகளில் எளிமையான பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

இந்த நடவடிக்கைகள் மூலம் ஓய்வு பெறும் ஊழியர் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து தங்களுக்கான இபிஎப் தொகையையும், ஓய்வூதியத்துக்கான பணிகளையும் மேற்கொள்ள முடியும். அதோடு தங்கள் குறைகளையும் டிஜிட்டல் நடவடிக்கைகள் மூலமே களைந்து கொள்ள முடியும். இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக சமீபத்தில் ஏடிஎம் வசதியுடன், எல்ஐசி காப்பீட்டுக்கான உரிமைத்தொகையையும் இபிஎப் கணக்கில் இருந்தே செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைந்துள்ள தொழிலாளர்களின் ஊதிய உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. கடைசியாக 2014ம் ஆண்டு உயர்த்தப்பட்ட ஊதிய உச்சவரம்பு, 10 ஆண்டுகள் கடந்தும் உயர்த்தப்படவில்லை. தற்போதைய காலக்கட்டத்தில் உள்ள சூழலுக்கு ஏற்ப இபிஎப் திட்டத்தில் இணையும் ஊழியர்களின் ஊதிய உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டும் சமீபத்தில் ஊதிய உச்ச வரம்பை 4 மாதங்களுக்குள் திருத்தும்படி அறிவுறுத்தியுள்ளது.

இபிஎப் ஊதிய உச்சவரம்பை அதிகரிப்பதால், தனியார் துறையில் பணிபுரிபவர்களின் ஓய்வூதிய நிதியை அதிகரிக்கும். இது நடுத்தர வருமான பிரிவில் உள்ளவர்களுக்கு குறிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும். ஊதிய உச்சவரம்பு ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் யாரெல்லாம் கட்டாயமாக சேர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வரம்பாகும்.

ஆகையால் இதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இபிஎப் ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால், அதனால், பணி ஓய்வுக்கு பிறகான ஓய்வூதிய பாதுகாப்பு அதிகரிக்கும். லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையாக இது இருக்கும் என்று தொழிற்சங்கங்களும் கருத்து தெரிவித்து வருகின்றன. அதற்கேற்ப ஊதிய உச்சவரம்பு மாதத்திற்கு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிப்பதற்கான பரிசீலனை வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக இபிஎப் அதிகாரிகள் கூறுகையில், ‘உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், ஊழியர்கள் மத்தியில் எழுந்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையிலும் ஊதிய உச்சவரம்பை அதிகரிக்க செய்வதற்கான பரிசீலனை நடந்து வருகிறது. அப்படி ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களின் இபிஎப் கார்ப்பஸ் மற்றும் இபிஎஸ் ஓய்வூதியம் என இரண்டிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தும்.

இதன் மூலம் பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு நிதி பாதுகாப்பு கிடைக்கும். அதேநேரத்தில், ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்படும்போது தொழிற், வர்த்தக நிறுவனங்களுக்கான நிதிச்சுமையும் அதிகரிக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை’ என்றனர்.

Tags : Provident Fund ,Vellore ,
× RELATED தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓ பதவி...