மயிலாடுதுறை, ஜன.12: மயிலாடுதுறையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மாவட்ட போக்குவரத்து காவல்துறை மற்றும் அழகுஜோதி அகாடமி பள்ளி சார்பில் போக்குவரத்து சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 12 வயதுமுதல் 18 வயது வரை இரு பாலர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 7 கி.மீட்டரும், பெண்களுக்கு 5 கி.மீ தூரம் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. ஆண்களுக்கு கால்டெக்ஸ் மற்றும் பெண்களுக்கு மணக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய போட்டியை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார், அழகு ஜோதி அகாடமி பள்ளி தாளாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்தவர்களுக்கு ரூ.5,000, இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.3000, மூன்றாம் இடத்தில் வந்தவர்களுக்கு ரூ.2,000 மற்றும் நான்கு முதல் பத்து இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டியில் 650க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
