நாமக்கல்லில் 39 இடங்களில் குப்பை சேகரிப்பு மையம் நாமக்கல்லில் 39 இடங்களில் குப்பை சேகரிப்பு மையம்

நாமக்கல், ஜன.12: போகிப்பண்டிகையை குப்பை திருவிழாவாக கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, நாமக்கல் மாநகரில் 39 இடங்களில் குப்பை சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, வரும் 15ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, வெள்ளை அடித்து, அழகுபடுத்தி பொங்கலுக்கு முதல் நாளான(14ம் தேதி) போகிப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். நமது முன்னோர்கள் பொங்கல் பண்டிகைக்கு முன், பழையன கழிதலும்-புதியன புகுதலும் என்ற அடிப்படையில், போகிப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை, இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்தனர். இதனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. ஆனால், தற்போது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசடைகிறது.

மேலும், போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த நச்சுப்புகையின் காரணமாக, சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இதனால், இந்த ஆண்டு தமிழக அரசு குப்பை திருவிழா என்ற பெயரில் புகையில்லா போகியை கொண்டாடும்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாநகரில் உள்ள 39 வார்டுகளில் குப்பை சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் கூறியதாவது: நாமக்கல் மாநகராட்சி பகுதியில், புகையில்லா போகி மற்றும் குப்பை திருவிழா கொண்டாட மாநகராட்சி நகர்நல அலுவலர் கஸ்தூரிபாய், சுகாதார அலுவலர் திருமூர்த்தி தலைமையில் அலுவலர்கள், பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு மாநகரில் உள்ள 39 வார்டுகளிலும், போகி பண்டிகையையொட்டி குப்பை சேகரிக்கும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாநகரில் உள்ள பொதுமக்கள் புகையில்லா போகியை கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான குப்பை, இதர குப்பை என தனித்தனியாக பிரித்து, தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

குப்பைகளை பொது இடங்களில் கொட்டி தீ வைத்து எரிக்கக் கூடாது. பொதுமக்களின் வசதிக்காக, நாமக்கல் மாநகரில் உள்ள 39 வார்டுகளிலும் குப்பை சேகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள வாரச்சந்தை வளாகம், சேந்தமங்கலம் ரோடு மற்றும் அனைத்து நுண்ணுயிர் செயலாக்க மையங்களில், பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் உள்ள தேவையில்லாத கழிவுகளை, நேரடியாக குப்பை சேகரிப்பு மையங்கள் அல்லது மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். மாநகராட்சி பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், சுற்றுச்சூழல் மாசடையாமல் இருக்கவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கமிஷனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: