×

ஓசூரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் ரூ.138 கோடியில் ரிங்ரோடு திட்டத்தை அரசு விரைவுபடுத்த எதிர்பார்ப்பு

ஓசூர், ஜன.12: ஓசூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.138 கோடி மதிப்பீட்டில் ரிங்ரோடு திட்டத்தை அரசு விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கு ஏற்ற சாலை கட்டமைப்புகள் இல்லை. அதனால், ஒன்றிய, மாநில அரசுகள், ஓசூர் நகரை சுற்றி பெங்களூருவை இணைக்கும் வகையில் பல்வேறு சாலை கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதிலும், குறிப்பாக தர்மபுரியிலிருந்து நெரலூர் செல்லும் சாலை, சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. ஓசூர் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள சீதாராம்மேட்டில் இருந்து இ.எஸ்.ஐ., மருத்துவமனை வரை, 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு இன்னர் ரிங்ரோடு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.

அதனால், பெங்களூருவிலிருந்து வரும் கனரக வாகனங்கள், ஓசூர் நகருக்குள் வராமல் தமிழக எல்லையான ஜூஜூவாடியில் இருந்து பேரண்டப்பள்ளிக்கு செல்லும் வகையில் ரிங்ரோடு அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.320 கோடியை ஒதுக்கியுள்ளார். இதற்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டத்திற்கு 5 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்த வேண்டியுள்ளது. அதை செய்து, உடனடியாக பணிகளை துவங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம், பத்தலப்பள்ளியில் ஓசூருக்கு புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு வருகிறது. இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள் நடக்கின்றன. மேலும் பத்தலப்பள்ளி பகுதியில் பஸ் ஸ்டாண்ட் வருவதால் அங்கிருந்து ஓசூர் நகருக்குள் செல்லாமல் ராயக்கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு பஸ்களை இயக்கவும் மற்றும் பிற வாகனங்கள் செல்லவும் ஒரு ரிங்ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏனென்றால் ஓசூர் பத்தலப்பள்ளி புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்து அங்கிருந்து தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ராயக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் சென்றால் ஓசூர் நகரம் மேலும் போக்குவரத்து நெரிசலில் தவிக்கும். எனவே, குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல வசதியாக, பத்தலப்பள்ளியில் இருந்து ராயக்கோட்டை சாலையில் புதிதாக கட்டப்படும் ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வழியாக கெலமங்கலம் சாலையிலுள்ள ஜொனபெண்டா வரை 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய ரிங்ரோடு அமைக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை கருத்துரு தயார் செய்து, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ளது. இந்த சாலைக்கு, நில எடுப்பு பணி மற்றும் சாலை அமைக்க என ரூ.138 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சாலைக்கு தமிழக அரசு விரைவாக அனுமதி கொடுத்தால், நகரின் போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வரும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Hosur ,Krishnagiri district ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை