தர்மபுரி, ஜன.12: தர்மபுரி மாவட்டத்தில், உயிர் காக்கும் உன்னத திட்டமான 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம், கடந்த 2025ம் ஆண்டில் 43,200 பேர் பயன் பெற்றுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி, உயிர் காக்கும் 108 உன்னத திட்டமான அவசர கால ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கியது. தற்போது, மாவட்டத்தில் 29 ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகிறது. தர்மபுரி வட்டத்தில் 3 ஆம்புலன்ஸ்களும், பென்னாகரம் 4, பாலக்கோடு 4, காரிமங்கலம் 3, அரூர் 7, பாப்பிரெட்டிப்பட்டி 4, நல்லம்பள்ளி 2 மற்றும் தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான 1 ஆம்புலன்சும், அரூர் அரசு மருத்துவமனையில் 1 ஆம்புலன்சும் செயல்படுகிறது.
குறிப்பாக, அதிநவீன உயர் சிகிச்சை அளிப்பதற்காக 6 ஆம்புலன்ஸ்கள் மாவட்டத்தில் செயல்படுகிறது. விபத்தில் சிக்குபவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்ப்பது, கர்ப்பிணி பெண்களை பிரசவத்திற்காக அழைத்து செல்லும் பணிகளை 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கர்ப்பிணி தாய்மார்களுக்கு, அவர்கள் விரும்பும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழிவகை செய்யப்பட்டுள்ளது
இச்சேவையால் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2025 ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 12,926 கர்ப்பிணி பெண்களை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2025 ஆண்டு மட்டும் விபத்தால் பாதிக்கப்பட்ட 9394 நபர்களை மீட்டு அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், தற்கொலை முயற்சி (விஷம் அருந்துவது, தூக்கிட்டுக் கொள்வது) செய்து கொண்டவர்கள் 2860 பேரும், நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட 2,330 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது மட்டுமின்றி அவசர சிகிச்சைக்காக 15,960 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும், தர்மபுரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் 43,200 அழைப்புகள் பெறப்பட்டுள்ளது. பணியில் மொத்தம் 144 பணியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளர் ரஞ்சித் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 29 செயல்பட்டு வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் சிக்கியவர்கள் ஏராளமானோர் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 2025ம் ஆண்டு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் 43,200 பேர் பயனடைந்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் சேவையில் 144 பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, இந்த இலவச சேவையினை சீரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,’ என்றார்.
