போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 773 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

தர்மபுரி, ஜன.12: தர்மபுரி மாவட்டத்தில் 2025ம் ஆண்டில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 773 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் சாலை விபத்து உயிரிழப்புகளில், 67 சதவீத விபத்துக்கள் நேரான சாலையில் நடக்கிறது. இளம் வயதினர் 18 முதல் 45 வயது உடையோர் 66.4 சதவீதம் பேர் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். 18 முதல் 60 வயதுடைய வேலை பார்க்கக்கூடிய வயதினர் 83.4 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இருசக்கர வாகனமே மொத்த விபத்து மற்றும் உயிரிழப்புகளில் 44.8 சதவீதம் பங்கு வகித்துள்ளது.

தமிழகம் தொடர்ந்து, 6 வருடங்களாக தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துக்கள் ஏற்படும் மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்ததாக உத்திரபிரதேசமும், மத்திய பிரதேசமும், கர்நாடகாவும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் அதிக உயிரிழப்பிற்கு அதிக வேகம் 73 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது.

எதிர் திசையில் வாகனத்தை ஓட்டி அதனால் உயிரிழப்பு ஏற்பட்டது 18 சதவீதமாக உள்ளது. மனித தவறுகளில் சாலை விதிகளை பின்பற்றாதது உரிய ஓட்டுனர் உரிமம் இல்லாதது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாதது ஆகியவை முக்கிய காரணமாக இருக்கிறது. சாலை விதிகளை பின்பற்றாததில் அதிக வேகமாக செல்வது, எதிர் திசையில் பயணிப்பது, 2 சக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணிப்பது, தலைக்கவசம் அணியாமல் பயணிப்பது, இலகுரக வாகனத்தில் சீட் பெல்ட் அடையாமல் பயணிப்பது போன்றவை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைவதாக கடந்த 2023ம் ஆண்டு ஒன்றிய அரசின் சர்வேயில் தெரியவந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில், 2025ம் ஆண்டு (ஜனவரி முதல் டிசம்பர் வரை) 395 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்தில் 410 பேர் பலியாகியுள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 2024ம் ஆண்டு 1436 சாலை விபத்துகளில் 387 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு 1421 சாலை விபத்துக்களில் 350 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இணைந்து பொதுமக்களுக்கு தினமும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை எடுத்துக் கூறியும் விபத்துக்களை குறைப்பதற்கு பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 2025ம் ஆண்டில் விதிகளை மீறி ஆட்களை ஏற்றி சென்ற 312 சரக்கு வாகனங்களுக்கும், அதிக பாரம் ஏற்றிச்சென்ற 218 வாகனங்களுக்கும், அனுமதிச்சீட்டு இல்லாமல் இயக்கிய 184 வாகனங்களுக்கும், அதிவேகமாக இயக்கப்பட்ட 1501 வாகனங்களுக்கும், தகுதிச்சான்று பெறாமல் இயக்கப்பட்ட 424 வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

சிவப்பு நிற பிரதிபலிப்பான்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 899 வாகனங்களும், சிவப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கப்பட்ட 570 வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டதால் 38 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 773 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது,’ என்றனர்.

Related Stories: