×

திருப்பூரில் பாஜ பொதுக்கூட்டம்; அண்ணாமலைக்கு முக்கியத்துவம்: நயினார் நாகேந்திரன் டென்ஷன்

 

 

திருப்பூர்: திருப்பூரில் நேற்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனரில், மாநில தலைவர் படத்தை புறக்கணித்து, அண்ணாமலைக்கு அக்கட்சியினர் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், பொதுக்கூட்டம் நேற்று திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டார் பங்கேற்றிருந்தனர். பொதுக்கூட்டம் குறித்தும், தலைவர்களை வரவேற்கும் வகையிலும் பாஜக சார்பில், திருப்பூர்-பெருமாநல்லூர் சாலையில் பல்வேறு பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

அவற்றில் பெரும்பாலான பேனர்களில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் படம் தவிர்க்கப்பட்டு முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலையின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. மேலும் சில பேனர்களில் நயினார் நாகேந்திரன் படம் சிறியதாகவும் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் படம் பெரியதாகவும் போடப்பட்டிருந்தது. பாஜகவின் மாநில தலைவராக நயினார் நியமிக்கப்பட்டிருந்தாலும்கூட மேற்கு மண்டலத்தில் மாநில தலைவருக்கு மேலாக முன்னாள் தலைவருக்கு கட்சியினர் மரியாதை வழங்குவதும் அவரை விளம்பரப்படுத்துவதுமாக இருப்பது கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுக்கூட்டத்தில் அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கும்போது, ‘‘நாளைய தமிழகமே, எங்களின் எதிர்காலமே’’ என்ற கோஷத்தை பயன்படுத்தியதும் மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரனுக்கு டென்ஷனை ஏற்படுத்தியது. இதனால், நேற்றைய பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் தனது பேச்சை விரைவாக முடித்துக்கொண்டார்.

Tags : BAJA ,THIRUPPUR ,ANNAMALA ,NAYANAR NAGENDRAN TENSHAN ,Tiruppur ,BJP ,Annamalai ,Bharatiya Janata Party ,Tiruppur Northern District ,Tiruppur Pandian Nagar ,
× RELATED சொல்லிட்டாங்க…