×

ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்

சென்னை: பஸ் உரிமையாளருக்கு ரூ.30 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.77 லட்சம் பெற்று ஏமாற்றியதாக அரசியல் கட்சி நடத்தி வரும் ஹரி நாடார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கட்டுக்கட்டாக பணம், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட பழைய வழக்குகள் குறித்து போலீஸ் கமிஷனர் அருண் ஆய்வு செய்து வந்தார்.

அதில் நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார். பல மாதங்களாக குற்றவாளிகளை பிடிக்காமல் இருந்த டீமுக்கு பதில் வேறு தனிப்படையை அமைத்து குற்றவாளிகளை கைது செய்யவும் உத்தரவிட்டார். அதன்படி சென்னை கோயம்பேட்டில் மேட்டூர் சூப்பர் சர்வீஸ் உரிமையாளர் ஆனந்த் குமார், தனது டிராவல்சை விரிவுபடுத்த விரும்பினார்.

அவர் சேலத்தைச் சேர்ந்த பாலு என்பவர் மூலம் ஹரிநாடாரை அணுகி ரூ.30 கோடி கடன் வாங்கித் தரும்படி கூறியுள்ளார். அவரும், அவ்வளவு கடன் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றால் ரூ.77 லட்சம் கமிஷனாக தரவேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் ரூ.70 லட்சத்தை வங்கி மூலமாகவும், ரூ.7 லட்சத்தை ரொக்கமாகவும் ஆனந்த் குமார் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய ஹரிநாடார், ரூ.30 கோடிக்காக 2 வரைவோலைகளை (டிமாண்ட் டிராப்ட்) கொடுத்துள்ளார்.

அந்த வரைவோலைகள் போலி என்று தெரியவந்தது. இதுகுறித்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தனிப்படை போலீசார், ஹரிநாடாரை தேடி வந்தபோது அவர், சென்னையில் இருந்து திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருக்கும் தகவல் கிடைத்தது. போலீசார் திருச்சி பைபாசில் வைத்து நேற்று காலையில் ஹரி நாடாரை கைது செய்தனர்.

அவரது காரை சோதனையிட்டபோது ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. மேலும் 7 செல்போன்கள், 2 டாங்கிள் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டன. அதேநேரத்தில், அவருக்கு இந்த மோசடியில் உடந்தையாக இருந்ததாக சேலத்தைச் சேர்ந்த பாலு என்பவரையும் கைது செய்தனர். இருவரையும் சென்னக்கு அழைத்து வந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ஹரி நாடார், நெல்லை மாவட்டம் மேல இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். பின்னர், அக்கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சத்திரிய சான்றோர் படை என்ற புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

ஹரி நாடார், அதேபோல, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியில் வந்த பிறகுதான் இந்த மோசடியில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்துள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஹரி நாடார், அதேபோல, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியில் வந்த பிறகுதான் இந்த மோசடியில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்துள்ளார்.

Tags : Hari Nadar ,Chennai ,
× RELATED கடன் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஹரி நாடார் கைது