×

கூட்டணி குறித்து பொதுவெளியில் காங்கிரசார் பேசக்கூடாது: செல்வப்பெருந்தகை அதிரடி உத்தரவு

சென்னை: திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்டுக் கோப்பாக உள்ளது. கூட்டணி குறித்து காங்கிரசார் பொதுவெளியில் பேச கூடாது என்று கட்சியினருக்கு செல்வப்பெருந்தகை அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2004ல் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2024 வரை 2014 ஒரு தேர்தலை தவிர கூட்டணி அமைத்து தமிழ்நாட்டில் போட்டியிட்டிருக்கின்றன.

இதில் குறிப்பாக 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக, பாஜ உள்ளிட்ட வகுப்புவாத, ஊழல் சக்திகளை தோற்கடித்து தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்கிற கூட்டணியாக இந்தியா கூட்டணி திகழ்ந்து வருகிறது.

அதிமுகவை பயன்படுத்தி வகுப்புவாத பாஜ, தமிழ்நாட்டில் காலூன்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா கூட்டணியை பலகீனப்படுத்துகிற முயற்சியின் மூலம் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்துவற்கு எந்த வகையிலும் காங்கிரஸ் கட்சியினர் அனுமதிக்கக் கூடாது.  சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியபடி, காங்கிரஸ் கட்சி அமைத்த ஐவர் குழுவினர் திமுகவுடன் முதற்கட்டமாக பேசியிருக்கிறார்கள்.

காங்கிரஸ், திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைமை, அகில இந்திய காங்கிரஸ் தலைமையோடு கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய நிலையில், இதுகுறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் எவரும் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Selvapperundhagai ,Chennai ,DMK-Congress ,Tamil Nadu Congress ,DMK ,Congress ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...