திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் இல்லாததால், அங்குள்ள காவலர்களுக்கு பணிகளை பகிர்ந்தளித்தல் உள்பட பல்வேறு பணிகளில் பாதிப்பு நிலவி வருகிறது. இத்தகைய அவலநிலையை தடுக்க, அங்கு உடனடியாக ஆய்வாளர் பணியை நிரப்ப வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லையில் அதிகளவு கிராமங்களை உள்ளடக்கியதாக திருக்கழுக்குன்றம் காவல் நிலையம் அமைந்துள்ளது. இக்காவல் நிலையத்தில் 92 கிராமங்கள் மற்றும் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி பகுதிகளை உள்ளடக்கி இயங்கி வருகிறது. மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளடக்கிய தாலுகாவின் தலைநகரான திருக்கழுக்குன்றத்தில் நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலம், வட்டார வளர்ச்சி அலுவலகம், சார்நிலை கருவூலம், சார்பதிவாளர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனையுடன் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலும் உள்ளது.
இக்கோயிலில் சித்திரை திருவிழா உள்பட பல்வேறு விழாக்களின்போது பக்தர்களுக்கு பாதுகாப்பு உள்பட சாதிய மோதல் மற்றும் நிலத்தகராறு சம்பந்தமான பிரச்னைகளை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை திருக்கழுக்குன்றம் காவல்நிலைய போலீசார் மேற்கொள்ள வேண்டும். எனினும், இப்பணிகளை காவலர்களுக்கு வரையறுத்து பகிர்ந்தளிப்பது, அப்பணிகளில் நியமிக்கப்பட்ட காவலர்கள் சரியான முறையில் மேற்கொள்கின்றனரா என்பதை அந்தந்த காவல் ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும். எனினும், திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்த விநாயகம் என்பவர், கடந்த ஒர மாதத்துக்கு முன் சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அவர் பணி மாறுதலாகி சென்று ஒரு மாதத்தை கடந்த பிறகும், திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் இதுவரை புதிதாக ஆய்வாளர் நியமிக்கப்படவில்லை.
இதனால் அக்காவல் நிலைய நிர்வாகம் மற்றும் காவல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், திருக்கழுக்குன்றத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு பணிகள் பகிர்ந்தளிக்கப்படாததால், அங்கு இரவு நேர ரோந்து பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே, இத்தகைய அவலநிலையை தடுக்க, திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் காலியாக உள்ள ஆய்வாளர் பணியிடத்தை உடனடியாக நிரப்புவதற்கு செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
