பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் விழா கோலாகலம்: 1 லட்சம் பக்தர்கள் நேர்த்திக்கடன்

கோபி: கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று நடந்தது. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கோபி மற்றும் அதைச்சுற்றி உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்து விரதம் இருக்க தொடங்கினர். 2ம் தேதி தேர் நிலை பெறுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து 5ம் தேதி மாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று காலை மா விளக்கு எடுத்தல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் அதன் பின்னர் பூத வாகன காட்சியும் நடைபெற்றது.

இந்நிலையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த சுமார் 12 டன் விறகுகளை கொண்டு நேற்று இரவு குண்டம் திறப்பு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விடிய விடிய வீரமக்கள் குண்டத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து காலை 6 மணிக்கு கோயில் தலைமை பூசாரி சிவநாதன், படைக்கலம் எடுத்துச்சென்று, முதலில் நந்தா தீபம் ஏற்றினார். அதைத்தொடர்ந்து குண்டத்திற்கு தலைமை பூசாரி சிவநாதன் சிறப்பு பூஜைகள் செய்து முதலில் குண்டம் இறங்கினார். அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர்.

தொடர்ந்து கோயில் பூசாரிகளும், குண்டம் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான வீரமக்களும் குண்டம் இறங்கினர். இதைத்தொடர்ந்து 2 நாட்களாக கோயில் வளாகத்தில் காத்திருந்த பொதுமக்கள் குண்டம் இறங்கினர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். குழந்தைகள், சிறுவர், சிறுமியருடன் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் குண்டம் இறங்கியபோது அம்மன் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 600 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நாளை தேரோட்டம்
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாயொட்டி நாளை 9ம் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அம்மன் கோயிலுக்கு முன்பிருந்து தேர் புறப்பட்டு ஆதிநாராயண பெருமாள் கோயில் வழியாக அமர பணீஸ்வரர் கோயிலுக்கு செல்கிறது. அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டு 10ம் தேதி நிலை சேர உள்ளது. அன்று இரவு அம்மன் மலர் பல்லக்கில் புறப்பட்டு கோபிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். கோயிலில் இருந்து அம்மன் வீதி உலாவாக புறப்பட்டு 11ம் தேதி அதிகாலை கோபியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலை சென்றடைகிறது. அன்று கோபியில் தெப்போற்சவமும், 12, 13ம் தேதிகளில் கோபியிலும், 14, 15ம் தேதிகளில் புதுப்பாளையத்திலும், 16 17 ஆகிய தேதிகளில் நஞ்சகவுண்டன் பாளையத்தில் மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறுகிறது. பின்னர் அம்மன் கோயிலை சென்றடையும் நிகழ்ச்சி மாலை நடைபெறுகிறது. அன்று இரவு மறு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Related Stories: