பெரம்பலூர், ஜன. 8: பெரம்பலூர் நகரில் நான்கு ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த சங்கப்பா என்ற நபரை பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து கடந்த 2024 டிசம்பர் 3ம் தேதி மீட்டு பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன்நகர் அருகே இயங்கி வரும் வேலா கருணை இல்லத்திற்கு அழைத்துச் சென்று அதன் நிர்வாகி அனிதா என்பவரிடம் ஒப்படைத்தார்.
அவருக்கு மனநல மருத்துவர் அசோக் என்பவர் மூலம் வேலா கருணை இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நன்கு குணமாகி தான் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விபரங்களை சங்கப்பா தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த நபர், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன் மகன் சங்கப்பா (எ) சங்கமேஷ் படிகர் (42) என்பது தெரிய வர, மேற்கண்ட நபரின் சகோதரரான கர்நாடகா மாநிலம், பிஜாப்பூர் நந்தி நகர் டக்கே சாலை, டிரஷரி காலனி பின்புறம் பகுதியைச் சேர்ந்த மல்லிகார்ஜூன் மகன் ராஜ்ஷேர் படிகர், (44)என்பவர் வரவழைக்கப்பட்டார்.
அவரிடம் பெரம்பலூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து, வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா மற்றும் மனநல மருத்துவர் அசோக் ஆகியோர் சங்கப்பாவை ஒப்படைத்தனர். இந்தச் செய்தியறிந்த பெரம்பலூர் எஸ்பி ஜி.எஸ்.அனிதா அனைவரையும் வெகுவாக பாராட்டினார்.
