ஊட்டி அருகே காட்டேரி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: ஊட்டி அருகே காட்டேரி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அணைகள், நீரோடைகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சி என இயற்கை அழகை கொண்டுள்ளது. இவற்றை காண நாள்தோறும் பல்லாயிரம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஊட்டி அருகே உள்ள காட்டேரி நீர்வீழ்ச்சி, கோத்தகிரி உயிலட்டி நீர் வீழ்ச்சி மற்றும் கல்லட்டி நீர் வீழ்ச்சி போன்றவை சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. பருவமழை காலங்களில் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

தற்போது பருவமழை குறைந்த போதிலும் காட்டேரி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வெள்ளி இழைகளை போன்று எந்நேரமும் கொட்டிக் கொண்டிருக்கிறது. குறைந்த அளவு தண்ணீர் கொட்டினாலும் இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர். ஊட்டியில் இருந்து கேத்தி-பாலாடா வழியாக குன்னூர் மற்றும் சமவெளி பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் காட்டேரி பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து செல்கின்றனர். நீர்வீழ்ச்சி அருகே செல்ல முடியாத நிலையில் தொலைவிலிருந்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

Related Stories: