மூணாறு: மூணாறு பகுதியில் தேயிலை தோட்டங்களில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர். கேரள மாநிலம், மூணாறு அருகே உள்ள நல்ல தண்ணீர் நடையார் தேயிலை தோட்டப்பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இதனால், தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் ஆட்டோ ரிக்ஷாவை காட்டுயானைகள் சேதப்படுத்தின. இரவு, பகல் பாராமல் சுற்றித்திரியும் மூன்று காட்டுயானைகள் குடிநீர் குழாய்கள், விவசாயப் பயிர்கள் என அனைத்தையும் சேதப்படுத்தி வருகின்றன.
இதேபோல, லாக்காடு, சொக்கநாடு எஸ்டேட் பகுதிகளில் நடமாடும் ‘‘படையப்பா’’ என அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை மற்றும் மளிகைக் கடையை உடைத்து, பொருட்களை சூறையாடி அட்டகாசம் செய்து வருகிறது. எனவே, மூணாறில் தேயிலை தோட்டப் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், காட்டுயானைகளை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோட்ட தொழிலாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
