நன்றி குங்குமம் தோழி
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்குடி என்பார்கள். சங்க இலக்கியங்க ளில் காலத்தால் முந்திய நூலான தொல்காப்பியம், தமிழ் மொழியின் தாய் மடியாக விளங்குகிறது. அவ்வாறு சிறப்பு மிக்க தொல்காப்பியம் நூல் குறித்து மாநாடுகள் மற்றும் சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது. அதன் வரிசையில் தற்போது தொல்காப்பியம் முற்றோதலும் நிகழ்ந்துள்ளது.
உலகம் முழுவதுமே முற்றோதல் செய்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். முற்றோதல் செய்வது எளிதுமல்ல. அதை நிறைவேற்றியுள்ளார் விருதுநகர் மாவட்டம், சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியான உமாமகேஸ்வரி. தொல்காப்பியம் 3 அதிகாரங்கள், 27 இயல்புகள், 1610 நூற்பாக்கள் கொண்டது. இவர் இதனை முற்றோதல் செய்துள்ளார். அவர் செய்த நிகழ்வு உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
‘‘நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது கொரோனா காலம். அந்த சமயத்தில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு சென்றார்கள். மாணவர்களுக்கான வாட்ஸப் குழு அமைக்கப்பட்டு அதில்தான் பாடங்கள் குறித்து அனைத்தும் விவரிக்கப்பட்டது. அதில் ஒரு செய்தி வெளியானது. திருக்குறள் மனப்பாடம் செய்ய ஆர்வமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று கூறியிருந்தார்கள். அதைப் பார்த்துவிட்டு நானும், எட்டாம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவிகளும் ஒன்றாக சேர்ந்து படிக்க சென்றோம். அதில் மூன்று பேர் தொடர முடியாமல் விலகி விட்டார்கள். நானும் மற்றொரு மாணவி மட்டும் திருக்குறளை முற்றோதல் செய்திருந்தோம். மேலும், 1330 திருக்குறளை பார்க்காமல் எழுதியது ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் சாதனையாக பதிவு பெற்றது.
தொல்காப்பியத்தில் எனக்கு ஆர்வம் வரக்காரணம் என் ஆசிரியை ஜான்சிராணி அவர்களின் கணவர் தமிழாசிரியர் ராஜசேகர் ஐயாதான். மற்ற மாணவிகளுக்கு நான் திருக்குறளை முற்றோதல் செய்த தருணத்தில் சிலப்பதிகாரம் கற்றுத் தந்து கொண்டிருந்தார். நான் திருக்குறளை செய்ததால், தொல்காப்பியத்தையும் செய்யச் சொல்லி என் ஆசிரியை அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் நான் தொல்காப்பியம் முற்றோதல் செய்ய தொடர் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.
அதில் எழுத்ததிகாரத்திலுள்ள 9 இயல்புகள், 483 நூற்பாக்களையும் படித்து ஒப்புவித்தேன். அடுத்து சொல்லதிகாரத்திலுள்ள 9 இயல்புகள், 463 நூற்பாக்களையும் ஒப்புவித்தேன். பொருளதிகாரம் படிக்கும் போது சற்று பயமாக இருந்தது. அதில் நூற்பாக்கள் எல்லாம் பெரிதாக இருக்கும். அதனை தமிழாசிரியர் ராஜசேகர் அவர்கள் தெளிவாக சொல்லிக் கொடுத்தார். ஒரு நாளைக்கு இரண்டு பக்கம் வாய்ஸ் மெசேஜ் எனக்கு வாட்ஸப்பில் அனுப்புவார். அவர் எந்தெந்த இடத்தில் ஏற்ற இறக்கத்துடன் உச்சரிக்கிறார் என கவனிப்பேன். 1610 நூற்பாக்களையும் படித்து ஒப்புவிக்கும் போது சில நூற்பாக்களை மறந்து விடுவேன். அதற்கான பயிற்சியும் கொடுத்தது மட்டுமில்லாமல், என்னால் செய்ய முடியும் என்று ஊக்கமும் அளித்தார். அவர் கொடுத்த ஊக்கம் மற்றும் பயிற்சியால்தான் என்னால் முற்றோதல் செய்ய முடிந்தது.
தொல்காப்பியத்தை படித்ததால் அதில் உள்ள வாழ்க்கைக்கான கருத்துக்களை தெரிந்து கொள்ள முடிந்தது. அதனை நான் எதிர்காலத்தில் மேடை பேச்சாக வெளிப்படுத்த விரும்புகிறேன். அதற்காக முயற்சியும் செய்ய திட்டமிட்டு இருக்கிறேன்’’ என்றவரை தொடர்ந்தார் தமிழாசிரியராகப் பணியாற்றும் ஆசிரியை ஜான்சிராணி.
‘‘கொரோனா தொற்றுக் காலத்தில் உமாமகேஸ்வரிக்கும், எட்டாம் வகுப்பு மாணவியான வேல்நாச்சியாருக்கும் திருக்குறள் கற்றுக் கொடுத்தேன். தமிழ் வளர்ச்சித் துறை மூலம் 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்து இருவரும் பரிசு பெற்றனர். திருக்குறளை எப்படிக் கேட்டாலும் அவர்களால் அந்தக் குறளை சொல்லும் அளவிற்கு பயிற்சி அளித்தேன். காலை மற்றும் மாலை ஒரு மணி நேரம் என தினமும் இரண்டு மணி நேரம் திருக்குறள் வகுப்பு நடைபெறும். அவர்கள் திருக்குறளை எழுதும் போது நானும் 1330 திருக்குறளையும் 1330ல் தொடங்கி 1 வரை தலைகீழாக பார்க்காமல் எழுதினேன். இதனை அகில இந்திய பதிவு புத்தக நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்துப் பாராட்டியது. உமாமகேஸ்வரியின் அண்ணன் அன்புராஜும் திருக்குறளை முற்றோதல் செய்தார். அவர் தமிழக அளவில் விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் வினாடி வினாப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.
எனது கணவர் ராஜசேகரின் உதவியுடன் உமாமகேஸ்வரி எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்று அதிகாரங்களும் அதில் இருக்கக்கூடிய 27 இயல்களையும், 1610 நூற்பாக்களையும் முழுமையாக கற்றுக் கொண்டாள். நானும் நான்கு மாணவிகளுக்கு கற்றுக் கொடுத்தேன். ஒவ்வொரு நூற்பாவின் பொருளையும் மாணவி உமாமகேஸ்வரி உள்வாங்கி கற்றுக் கொண்டார். ஒன்றரை ஆண்டு காலம் தொடர் பயிற்சி மற்றும் அவரின் விடாமுயற்சியால் முழுமையாக கற்றுக் கொண்டார். பொருள் அதிகாரத்தில் உள்ள நூற்பாக்கள் சற்று பெரியதாக இருக்கும். அதனால் படிப்பதில் சற்று தொய்வு ஏற்பட்டது. அப்பொழுது என் கணவர் அதை படிக்க அவளுக்கு வழிகாட்டினார். நாங்க இருவரும் தொடர்ந்து கொடுத்த ஊக்கத்தினால் முழுமையாகப் பொருளதிகாரத்தைக் கற்றுத் தேர்ந்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தொல்காப்பிய முற்றோதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டரை மணி நேரத்தில் தொல்காப்பியத்தினை மாணவி உமாமகேஸ்வரி முற்றோதல் செய்தார். அந்த நிகழ்வினை அகில இந்திய புத்தக நிறுவனமும், உலகத் தொல்காப்பிய பேரவையும் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.
ஆர்வமும் விடாமுயற்சியும் இருந்தால் அரசுப் பள்ளி மாணவர்களாலும் அரிய சாதனைகளைச் செய்ய முடியும் என்பதற்கு மாணவி உமாமகேஸ்வரி முன்னுதாரணம். தமிழ் மொழியின் சிறப்பையும் தொன்மையையும் அதிலுள்ள வாழ்க்கைக்கான நெறிகளை மாணவர்கள் அறிந்து கொண்டு அதை வாழ்க்கையில் பின்பற்றி சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருக்குறள், தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களையும் கற்றுத் தருகிறேன். எங்களின் முயற்சிகளுக்கு ஊக்குவித்து வரும் தலைமையாசிரியர், இதர ஆசிரியர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார் ஆசிரியை ஜான்சிராணி.
தொகுப்பு: மதுரை ஆர்.கணேசன்
