நாகர்கோவில் அருகே நள்ளிரவில் தும்பு ஆலை – ஆக்கர் கடையில் பயங்கர தீ விபத்து

 

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே தும்பு ஆலை, ஆக்கர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. விடிய, விடிய போராடி தீயை அணைத்தனர். நாகர்கோவில் அருகே உள்ள கேசவன்புதூர் பகுதியில் தும்பு ஆலை உள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த தும்பு ஆலையில் இருந்து புகை வந்தது. நேரம் செல்ல, செல்ல புகை அதிகரித்து அங்கு காய வைக்கப்பட்டு இருந்த தேங்காய் நார்கள் உள்பட அனைத்தும் தீ பிடித்து எரிய தொடங்கின. சிறிது நேரத்தில் மள,மளவென தீ பரவியது.  இது குறித்து உடனடியாக நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் உத்தரவின் பேரில் நாகர்கோவில் நிலைய அலுவலர்கள் (போக்குவரத்து) ராதாகிருஷ்ணன், பென்னட்தம்பி, சுப்பாராமன் (ராஜாக்கமங்கலம்) ஆகியோர் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்தனர். நாகர்கோவிலில் இருந்து 2 வண்டிகளும், ராஜாக்கமங்கலத்தில் இருந்து ஒரு வண்டியும் என்று மொத்தம் 3 வண்டிகளில் சென்று தீயை அணைத்தனர். அனைத்தும் தேங்காய் நார்கள் என்பதால், கிட்டாட்சி மூலம் அவற்றை கிளறி, கிளறி தீயை அணைத்தனர். அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை சுமார் 5 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.

தீ விபத்தில், அங்கிருந்த இயந்திரங்களும் எரிந்த சாம்பல் ஆகின. சேத மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து ஈத்தாமொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போல் நாகர்கோவில் அடுத்த பறக்கை ரோட்டில் உள்ள பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் ஆக்கர் கடையிலும் நேற்று இரவு தீ பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. இது குறித்து தகவல் அறிந்ததும் நாகர்கோவிலில் இருந்து தீயணைப்பு துறையினர் சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இரும்பு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவை பிடித்து எரிந்ததால், தீயை அணைக்க பெரும் சிரமம் அடைந்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணமும் தெரிய வில்லை. இது குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போல் ஆசாரிப்பள்ளம் பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த புதரில் இன்று காலை தீ பிடித்து எரிந்தது. காற்றும் வேகமாக வீசியதால் தீ வேகமாக பரவியது. இது குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு துறையினர் சென்று தீயை அணைத்தனர்.

Related Stories: