புனே: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி (81) புனேவில் காலமானார். சுரேஷ் கல்மாடி புனேவில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவரது உடல் புணே எரண்ட்வானேயில் உள்ள இல்லத்தில் பிற்பகல் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து, நவி பெத்தில் உள்ள வைகுந்த மயானத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
1954 முதல் 1972 வரை இந்திய விமானப்படையில் வீரராகப் பணியாற்றியவர். 1974-ல் முறைப்படி அரசியவில் காலடி எடுத்து வைத்தார். 1995-96 காலகட்டத்தில் மத்திய ரயில்வே துறை இணையமைச்சராகப் பணியாற்றினார். மேலும், 1982, 1996 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகத் (MP) தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றினார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர். இவரது பதவிக்காலத்தில் இந்திய விளையாட்டுத் துறையில் பல முக்கியமான மாற்றங்கள் மற்றும் சர்வதேசப் போட்டிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. 2010ல் காமல்வெல்த் முறைகேட்டில் சிக்கி சிறை சென்றார். அரசியல் மற்றும் விளையாட்டு நிர்வாகம் என இரண்டிலும் தடம் பதித்த சுரேஷ் கல்மாடியின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
