மும்பை: வீட்டில் நடைபெற்ற பூஜையில் பிரபல நடிகை சுதா சந்திரன் சாமியாடியபடி அருகில் இருந்தவரை கடிக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியத் திரையுலகில் மிகச் சிறந்த நடனக் கலைஞராகவும், விபத்தில் ஒரு காலை இழந்தும் தன்னம்பிக்கையுடன் சாதித்து வரும் நடிகை சுதா சந்திரன், ‘நாகின்’ உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆவார். இந்நிலையில் மும்பையில் உள்ள இவரது வீட்டில் நேற்று ‘மாதா கி சவுகி’ எனப்படும் சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற சேலை அணிந்து, தலையில் பட்டை கட்டிக்கொண்டு சுதா சந்திரன் பூஜையில் கலந்து கொண்டார்.
அப்போது பக்தி பாடல்கள் ஒலிக்கத் தொடங்கியதும், திடீரென உணர்ச்சிவசப்பட்டு சாமியாடத் தொடங்கினார். ஒருக்கட்டத்தில் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் ஆக்ரோஷமாக அருகில் இருந்த உறவினர் ஒருவரின் கையை கடிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் ரவி டாங் மற்றும் சக நடிகை ஜஸ்வீர் கவுர் உள்ளிட்ட 5 பேர் அவரைத் தாங்கிப்பிடித்து கீழே விழாமல் தடுத்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் ரசிகர்கள் சிலர், ‘இது பக்தி பரவசத்தால் ஏற்பட்ட நிலை’ என்றும், மற்ற சிலர் ‘அவரது உடல்நலம் மற்றும் மனநலம் குறித்து கவலை ஏற்பட்டுள்ளது’ என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
