* கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் கிடைக்கும்
* பணியின்போது இறந்தால் ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை
சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். இந்த திட்டத்தில் பழையபடி கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முதல்வருக்கு இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர்.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் போராடி வருகின்றன. இந்த சூழலில் வருகிற 6ம் தேதியில் இருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்தன. இந்த கூட்டமைப்புகளை அழைத்து கடந்த டிசம்பர் 22ம் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
இதனிடையே ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு, தமிழக அரசிடம் கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி அறிக்கையை அளித்தது. இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள சங்கங்களை பேச்சுவார்த்தைக்காக அமைச்சர்கள் குழு மீண்டும் அழைத்தது. அதன்படி, நேற்று முன்தினம் காலை தலைமை செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அமைச்சர் எ.வ.வேலுவுடன், அமைச்சர் தங்கம் தென்னரசும் கலந்து கொண்டார். ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ உள்ளிட்ட அனைத்து கூட்டமைப்புகளையும் தனித்தனியாக அழைத்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்கள் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும்படி 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்தோம். இந்த பேச்சுவார்த்தையில் ஓய்வூதிய திட்டத்தை முதன்மையாக வைத்து பேசினோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் 3ம் தேதி (நேற்று) ஓய்வூதியம் குறித்த நல்ல புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்’’ என்றனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை, தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஓய்வூதியம் தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் என்ன கருத்து தெரிவித்தனர் என்பது குறித்து முதல்வரிடம் அமைச்சர்கள் விளக்கி கூறினர். மேலும், ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு, தமிழக அரசிடம் அளித்த இறுதி அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த விவாதத்துக்கு பிறகு தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆட்சி என்கிற வாகனத்தின் சக்கரங்களாக இருக்கக்கூடியவர்கள் அரசு அலுவலர்கள். அந்த சக்கரங்கள், மக்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்களை கடைக்கோடி மனிதர் வரை கொண்டு சேர்க்க பயணிக்கின்றன. அதை உணர்ந்துள்ள அரசுதான் கலைஞர் வழிவந்த திராவிட மாடல் அரசு. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, 1.10.2025 முதல் அரசு பணியாளர்கள் தங்களது ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாக பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் அரசு செயல்படுத்தியுள்ளது. அரசு பணியாளர்கள், விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் 1 கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் 10 லட்சம் ரூபாயும், ஆயுள் காப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை திருமண செலவிற்கான உதவியாகவும், மேலும், உயர்கல்வி பயில ரூ.10 லட்சம் வரை நிதியுதவியும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
* அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கான கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும், கலை மற்றும் அறிவியல் கல்விக்கு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
* அரசு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* அனைத்து மாநிலங்களை காட்டிலும் அதிகமாக, தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணம் 40 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
* ஒழுங்கு நடவடிக்கைகளால் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளன்று தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படும் சூழ்நிலையை அகற்றி, அரசு பணியாளர்களை ஓய்வு பெற அனுமதித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
* ஓய்வூதிய பணிக்கொடை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
* ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு உதவி ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகை ரூ.500ல் இருந்து ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
* பெண் அரசு அலுவலர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனில் முழுமையான அக்கறையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் நாளன்று எவ்வளவு ஓய்வூதியம் பெறுவோம் என்று அறியாமல் ஓய்வு பெறும் நிலை கடந்த 20 ஆண்டுகளாக இருப்பதாகவும், இதனை அகற்றி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.
அவர்களின் இந்த நீண்டகால கோரிக்கைகள் என்பது ஒவ்வொரு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் குடும்பத்தினரின் வாழ்க்கையுடனும் அவர்களின் எதிர்காலத்துடனும் தொடர்புடையது என்பதை உணர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு, இவற்றின் மீது முழுக்கவனம் செலுத்தியதுடன், இக்கோரிக்கைகளை பரிசீலனை செய்து, அரசு அலுவலர்களுக்கு முறையான ஓய்வூதியத்தை வழங்குவது குறித்து, தகுந்த பரிந்துரைகளை வழங்க அரசு கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்து, அந்த குழுவின் அறிக்கையையும் பெற்றுள்ளது.
அரசு அலுவலர்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், மாநிலத்தின் நிதிநிலை, எதிர்காலத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வித தடைகளுமின்றி முறையாக ஊதியமும், ஓய்வூதியமும் கிடைக்கச் செய்யவேண்டிய பொறுப்பு போன்ற பல அம்சங்களை சீர்தூக்கி பார்த்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைத்து வந்த ஓய்வூதியம் மற்றும் பல்வேறு பலன்களை தொடர்ந்து அளிக்கக்கூடிய புதிய திட்டமாக “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் அறிவிப்பு வெளியிட்ட சிறிது நேரத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் மிகவும் உற்சாகம் அடைந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அனைத்து சங்க நிர்வாகிகளும் முதல்வருக்கு இனிப்புகள் ஊட்டி உற்சாகமாக கைகுலுக்கி நன்றியை தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு அனைத்து சங்கங்களும் வரவேற்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.
* அரசு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணம் 40 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
* ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு உதவி ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகை ரூ.500ல் இருந்து ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
* இந்த புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்
1. மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்கு தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
2. 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
3. ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
4. அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
5. புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
6. பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும். மேற்கூறிய TAPS திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு ரூ.13 ஆயிரம் கோடி அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ.11 ஆயிரம் கோடி அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். இந்த பங்களிப்பு தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும்.
தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களை காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும், பணப் பயன்களையும் பெற வழிவகுக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
