சென்னை: வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, சீமை கருவேலம் மற்றும் அன்னிய மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் அவை மீண்டும் வளரவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு தொடர் பராமரிப்புக்கான நிதியை மாநில அரசு விடுவிக்க வேண்டும். பராமரிப்பு சரிவர நடக்கவில்லை எனில் அப்பகுதியில் மீண்டும் அன்னிய மரங்கள் வளர்ந்துவிடும் என்று நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அன்னிய மரங்களை அகற்ற மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது. இந்த பணிகளை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இருப்பினும், தொடர் பராமரிப்புக்கு உரிய நிதியை வழங்காவிட்டால் மாநில அரசு இதுவரை எடுத்த முயற்சி வீணாகும் நிலை ஏற்படும். எனவே, பராமரிப்பு நிதியை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறை சிறப்பு பிளீடரிடம் அறிவுறுத்தினர்.
