சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, சென்னை தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை சார்பில் மொத்தம் 13 விருதாளர்களுக்கு 23.75 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். 2024-25ம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசிற்கான 5 லட்சம் ரூபாய் ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் கோபிநாதனுக்கும், இரண்டாம் பரிசிற்கான 3 லட்சம் ரூபாய் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் ராஜலட்சுமி மற்றும் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் கவுரி ஆகிய இருவருக்கும் தலா 1.50 லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசிற்கான 2 லட்சம் ரூபாய் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் மாலா மற்றும் திருப்பூர் மாவட்டம், தந்தை பெரியார் பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் ராஜவேல் ஆகிய இருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாயும்;
பருத்தி ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசிற்கான 5 லட்சம் ரூபாய் ராமநாதபுரம் மாவட்டம், மகாகவி பாரதியார் பருத்தி மற்றும் பட்டு தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் பாஸ்கரனுக்கும், இரண்டாம் பரிசிற்கான 3 லட்சம் ரூபாய் வதம்பச்சேரி ஸ்ரீ நடராஜர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் ராஜன்-க்கும், மூன்றாம் பரிசிற்கான 2 லட்சம் ரூபாய் திருப்பூர் மாவட்டம், கோவில் வழி பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் கந்தசாமிக்கும் என மொத்தம் 8 விருதாளர்களுக்கு 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் வழங்கி சிறப்பித்தார்.
சிறந்த வடிமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசிற்கான 1 லட்சம் ரூபாய் சென்னிமலை தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வடிவமைப்பாளர் அப்புசாமி கிருஷ்ணனுக்கும், மூன்றாம் பரிசிற்கான 50 ஆயிரம் ரூபாய் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் கண்ணனுக்கும் என மொத்தம் 2 விருதாளர்களுக்கு 1.50 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசிற்கான 1 லட்சம் ரூபாய் பண்ணாரியம்மன் தொழில்நுட்பக் கல்லூரிமாணவர் விமலுக்கும், இரண்டாம் பரிசிற்கான 75 ஆயிரம் ரூபாய் திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில் மூன்றாமாண்டு பயிலும் மாணவி மதுமிதாவுக்கும், மூன்றாம் பரிசிற்கான 50 ஆயிரம் ரூபாய் திருச்செங்கோடு, ரங்கசாமி தொழில்நூட்பக் கல்லூரியில் பொறியியல் இளங்கலை ஜவுளி தொழில்நுட்ப துறையில் இரண்டாமாண்டு பயிலும் மாணவி மோனிகாவுக்கும் என மொத்தம் 3 விருதாளர்களுக்கு 2.25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் வழங்கி சிறப்பித்தார்.
