இமாச்சல் பிரதேச அரசு கல்லூரியில் பாலியல் சீண்டல், ‘ராகிங்’ கொடுமையால் மாணவி மரணம்: பேராசிரியர், 3 சீனியர் மாணவிகள் மீது வழக்கு

தரம்சாலா: இமாச்சல பிரதேசத்தில் பேராசிரியர் மற்றும் சீனியர் மாணவிகளின் சித்ரவதையால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் உள்ள அரசு கல்லூரியில் பயின்ற 19 வயது தலித் மாணவி, கடந்த டிசம்பர் 26ம் தேதி லூதியானாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக அந்த மாணவி இறப்பதற்கு முன்பு கண்ணீர் மல்க பேசிய வீடியோ ஒன்று நேற்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், ‘அசோக் குமார் என்ற பேராசிரியர் தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டார். அவர் மனரீதியாக துன்புறுத்தினார். கடந்த செப்டம்பர் 18ம் தேதி ஹர்ஷிதா, ஆக்ரிதி, கோமோலிகா ஆகிய மூன்று சீனியர் மாணவிகள் என்னை ராக்கிங் செய்து கொடூரமாக தாக்கினர். இதுபற்றி வெளியே சொன்னால் விளைவுகள் மோசமாக இருக்கும் என மிரட்டினர்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகார் மற்றும் வைரலான வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், தர்மசாலா போலீசார் நேற்று முன்தினம் பேராசிரியர் அசோக் குமார் மற்றும் 3 சீனியர் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் மற்றும் ராக்கிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து காங்க்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் ரத்தன் கூறுகையில், ‘மருத்துவ அறிக்கைகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை வைத்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தார். குற்றச்சாட்டுகளை பேராசிரியர் மறுத்துள்ள நிலையில், கல்லூரி நிர்வாகமும் தங்களிடம் புகார் எதுவும் வரவில்லை என விளக்கம் அளித்துள்ளது. பாலியல் சீண்டல் மற்றும் ராக்கிங் கொடுமையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, பயத்தின் காரணமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: