டி.ராமநாதன், வால்பாறை.
நாம் விதிவழியே அனுபவிக்க வேண்டியவற்றை பிராரப்த கர்மாவை ஒட்டியே, இறைவன் நமது வாழ்க்கையை நிர்ணயிக்கிறான். இது அமைவது நமது முந்தைய பிறவியில் செய்த நன்மை, தீமைகளைப் பொறுத்தது. இதை மீறி எதுவும் நடப்பதில்லை. ஏனென்றால், இது ஒரு திட்டமிட்ட கணக்கு. இந்த ‘பாலன்ஸ் ஷீட்டை’ மாற்றினால், கணக்குச் சரிப்பட்டுவராது! எது நடக்க முடியாதோ, அதற்கு நாம் பிரயாசை எடுத்துக் கொண்டாலும், நடைபெறாது. எது நடக்க வேண்டுமோ, அது நாம் எவ்வளவு தூரம் தடுத்தாலும் நடந்தே தீரும். ஓர் இயந்திரத்தை நிறுவும்போதே அது இன்னின்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அமைத்து விடுகிறோம். அதை மாற்றிச் செய்ய இயந்திரத்துக்கு அதிகாரம் இல்லை. அதைப் போல, நாம் வந்து பிறக்கும் போதே, நம்மால் இன்னின்ன நடக்க வேண்டும் என்பதை ஆண்டவன் தீர்மானித்து விடுகிறான். அதிலிருந்து நாம் மாறுபட முடியாது. மனிதன் பக்தியினால் இன்ன செய்கை பிராரப்தம், இன்ன செய்கை அப்படி அல்ல என்பதை உணரும் பக்குவம் பெறுகிறான். அதன் மூலம் அவன் மேலும் தீயவற்றில் ஈடுபட்டு, அடுத்த பிறவிக்கும் சுமைகளைச் சேர்த்துக் கொள்ளாமல், தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான். அப்படி மனப்பக்குவம் பெற இது உதவும். விளைவுகளில் சுகமும் துக்கமும் அப்படிப் பட்டவனைப் பாதிப்பதும் இல்லை.
?சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு எந்த விதமான தோஷங்களும் கிடையாது என்று சொல்கிறார்களே… இதில் பிதுர் தோஷமும் அடக்கமா? தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.
என்.லட்சுமணன், திருவண்ணாமலை.
இந்தக் கருத்து ஏற்புடையது அல்ல. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு, ஆண் என்றாலும், பெண் என்றாலும், திருமணப் பொருத்தம் பார்க்கவேண்டிய அவசியமில்லை என்றுதான் விதி இருக்கிறதே தவிர, இவர்களை எந்த தோஷமும் அண்டாது என்று விதி இல்லை. யோகங்களும், தோஷங்களும் எல்லோருக்கும் பொதுவானவை. ஏனைய அனைவரையும் போல சுவாதி நட்சத்திரக்காரர்களும் பாதிக்கப்படுவர். இவற்றில் பித்ருதோஷமும் அடங்கும்.
?வயதுக்கு வந்த பெண்ணுக்கு ருது ஜாதகம் கணிப்பது அவசியமா?
மல்லிகா அன்பழகன், சென்னை.அவசியமில்லை. ருதுவான நேரத்தினைக் கொண்டு கணிக்கப்படும் ஜாதகத்தை வைத்து, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை அறிந்துகொள்ள இயலாது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பிறந்த ஜாதகத்தினைக் கொண்டே அவர்களது எதிர்கால பலனை அறிய இயலும். திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கும் பிறந்த ஜாதகம்தான் அவசியமே தவிர, ருது ஜாதகம் அல்ல. மேலும், பெரும்பாலான பெண்களுக்கு ருதுவாகும் நேரத்தினை துல்லியமாக அறிந்துகொள்ள இயலாது. அதனைக் கொண்டு சொல்லப்படும் பலன்களும் எதிர்மறை சிந்தனைகளை உருவாக்குகிறது என்பதால் இக்காலத்தில் ருது ஜாதகத்தினைக் கணிக்க வேண்டிய அவசியமில்லை. பிறந்த ஜாதகத்தினை துல்லியமாக கணித்து வைத்தாலே போதுமானது.
?லவ்பேர்ட்ஸ் எப்போதும் கத்திக்கொண்டே இருப்பது வீட்டிற்கு ஆகாது என்கிறார்களே, இது சரியா?
தேவராஜன், சென்னை.
லவ்பேர்ட்ஸ் மட்டுமல்ல, கிளி உள்பட எந்த பறவையினத்தையும் கூண்டில் அடைத்து வைத்திருப்பது வீட்டிற்கு ஆகாது. ‘சுதந்திரப் பறவை’ என்று சொல்வார்கள். அந்தப் பறவையையே அடைத்து வைப்பது என்ன நியாயம்? இவ்வாறு அடைத்து வைக்கப்படும் பறவைகள் சுதந்திரத்திற்காக கத்திக் கொண்டே இருப்பது, வீட்டில் தெய்வீக அலைகளை நிச்சயமாகத் தடைசெய்யும். இவ்வாறு பறவைகள் கத்திக்கொண்டே இருக்கும் இல்லங்களில் சண்டையும், சச்சரவும்தான் பெருகும். மாறாக, புறா போன்ற பறவைகளை கூண்டில் அடைக்காமல் சுதந்திரமாக பறக்கவிட்டு வளர்ப்பவர்களும் கிராமப்புறங்களில் இருக்கிறார்கள். இவ்வாறு பறந்து திரிந்துகொண்டிருக்கும் பறவைகளுக்கு தினசரி ஆகாரம் தரும் இல்லங்களில் பிரச்னை ஏதும் உருவாகாது. லவ்பேர்ட்ஸ், கிளி போன்ற பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து, அவை எப்போதும் கத்திக்கொண்டே இருந்தால் நிச்சயமாக வீட்டில் நிம்மதி இருக்காது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
?அருளாளர்கள் பாடுகின்ற பொழுது தன்னுடைய நெஞ்சைப் பார்த்து தான் பாடுகிறார்கள், ஏன்?
விஜய்குமார், சிவகாசி.
நீங்கள் சொல்வது உண்மைதான் “வணங்கு என் மனமே’’ “வணங்கு என் நெஞ்சே’’ “தொழுது எழு என் மனமே’’ என்ற வார்த்தைகளை அருட்பாடல்களில் நிறையப் பார்த்திருக்கிறோம். இதற்கு என்ன காரணம் என்று சொன்னால், நாம் பக்தியைச் செலுத்துகின்ற பொழுது, திரிகரண சுத்தியோடு ஈடுபட வேண்டும். அதாவது நம்முடைய செயல், நம்முடைய சொல், நம்முடைய மனம் இது மூன்றும் ஒன்றாக இணைந்து ஈடுபட்டால்தான் அந்த பக்தி சித்தியாகும். ஆனால், இந்த மூன்றிலும் சொல்லையும் செயலையும் பலவந்தப்படுத்தி ஈடுபடுத்திவிடலாம். உதாரணமாக தெய்வத்தைப் பார்த்தவுடன் கைகூப்பி வணங்கலாம். ஏதோ ஒரு மந்திரத்தை எங்கோ பார்த்துக் கொண்டு சொல்லலாம். ஆனால், உங்கள் கைகள் வணங்கினாலும் வாய் தன்னிச்சையாக மந்திரத்தைச் சொன்னாலும், மனம் ஏதோ ஒரு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும். அதை மட்டும் நீங்கள் வற்புறுத்தி உங்கள் வழிக்கு கொண்டு வர முடியாது. அதனால்தான் அருளாளர்கள் மனதிடம் போய் கெஞ்சுகிறார்கள். மனது வசப்பட்டுவிட்டால், சொல்லும் செயலும் அதோடு இணைந்துவிடும்.
?அதிர்ஷ்டம் என்ற ஒன்று கிடைக்க எந்த தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்?
ம.கிருஷ்ணா, வழுவூர்.
கடுமையாக உழைக்க வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்பதை தாரக மந்திரமாகக் கொள்ள வேண்டும். தொழிலுக்கு கிளம்புவதற்கு முன்னால் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை உணர்ந்து கண்ணுக்குத் தெரிந்த கடவுளாகிய பெற்றோரை வணங்கிவிட்டுச் சென்றால், கண்ணுக்குத் தெரியாத அதிர்ஷ்டம் என்பதும் வந்து சேரும்.
?மறைந்த முன்னோர்களின் பொருட்களை வீட்டில் வைத்து பாதுகாக்கலாமா?
டி.நரசிம்மராஜ், மதுரை.
மறைந்த முன்னோர்களின் உடலோடு ஒட்டி உறவாடிய பொருட்களாக இருந்தால் அதாவது அவர்களது ஆடைகள், பாய், தலையணை, காலணிகள் போன்ற பொருட்களை வீட்டில் வைத்து பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில், அவர்கள் உபயோகித்த வீடு, வண்டி, வாகனங்கள், பர்னிச்சர் சாமான்கள், நிலபுலன்கள், போன்றவற்றை பாதுகாக்கலாம். எந்தப் பொருள் என்பதைப் பொருத்து இந்தக் கேள்விக்கான பதில் மாறுபடும்.
அருள்ஜோதி
