×

இந்தாண்டின் முதல் போட்டி; தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 600 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல்: 300 வீரர்கள் மல்லுக்கட்டு

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் 600 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 300 வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக அளவில் புகழ் பெற்றது.

அதேசமயம் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் தச்சங்குறிச்சியில் நடத்தப்படும். அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவையொட்டி புனித விண்ணேற்பு அன்னை பேராலயம் அருகில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு ஜன. 3ம் தேதி (இன்று) ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டல் நடைமுறைகளின்படி தேவாலயத்தின் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டது. காளைகள் வரிசையாக அனுமதிக்கப்படும் இடத்தில் காளைகள் மீது வெயில் படாமல் இருப்பதற்காக மேற்கூரைகள் அமைக்கப்பட்டன. காளைகளை வீரர்கள் அடக்கும் பகுதியில் தேங்காய் நார்கள் கொட்டப்பட்டன. ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடுவதற்காக தஞ்சை, சிவகங்கை, திருச்சி, மதுரை, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600 காளைகள் அழைத்து வரப்பட்டன. 300 வீரர்கள் வந்திருந்தனர். காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு துவங்கியது. கலெக்டர் அருணா முன்னிலையில் வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியே முதலில் 10 கோயில் காளைகள் மற்றும் உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதைத்தொடர்ந்து மற்ற காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த காளைகளை, வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் கைதட்டி வீரர்களை உற்சாகப்படுத்தினர். சில காளைகள் ஆக்ரோஷமாக களத்தில் நின்று விளையாடி வீரர்களுக்கு தண்ணி காட்டியது.

போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பைக்குகள், கட்டில், சேர், குக்கர், வேட்டி மற்றும் சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டை ரசித்து பார்த்தனர்.

Tags : Jallikatu ,Tachankurichi ,Mallukattu ,Kandarvakota ,match of the year ,Thachankurichi ,Pudukkota ,Tamils ,Tamil Nadu ,Pongal ,
× RELATED செங்கல்பட்டில் நள்ளிரவில் காசி...