புழல்: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளிகள், தங்களுக்குள் திடீர் மோதலில் ஈடுபட்டனர். தடுக்க சென்றபோது, உதவி ஜெயிலரை பிடித்து கீழே தள்ளியதில் காயமடைந்ததார். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் தாதா நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ரவுடி பொன்னை பாலு, பெண் தாதா அஞ்சலை உள்பட பலர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த, வழக்கில் விசாரணைக்காக போலீஸ் கஸ்டடியில் அழைத்து செல்லப்பட்ட திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அண்மையில் தாதா நாகேந்திரன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். ஓராண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஸ்வத்தாமன், பெண் தாதா அஞ்சலை உள்பட 12 பேர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர். மேலும், பலர் ஜாமீன் கிடைக்காததால் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொன்னை பாலு, மணிவண்ணன் தரப்பிற்கும், புதூர் அப்பு தரப்பிற்கும் இடையே வழக்கு ஜாமீன் விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இருதரப்பிற்கும் இடையே சிறைக்குள் கைகலப்பு ஏற்பட்டு, மாறிமாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனை தடுக்கச்சென்ற சிறை உதவி ஜெயிலர் திருநாவுக்கரசை, ரவுடி கும்பல் பிடித்து கீழே தள்ளியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
உடனடியாக அங்கு வந்த சிறை காவலர்கள், இருதரப்பு ரவுடிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி, அவரவர் அறைகளில் அடைத்தனர். தொடர்ந்து உதவி ஜெயிலர் திருநாவுக்கரசு, சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக சிறை அதிகாரிகள் புகாரின் பேரில் புழல் போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
