பல்லாரியில் பேனர் கட்டுவதில் காங்-பாஜ மோதல் காங். தொண்டர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: பாஜ எம்எல்ஏ ஜனார்தனரெட்டி உள்பட 11 பேர் மீது வழக்கு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பல்லாரி மாநகரில் உள்ள வால்மீகி சர்க்கிளில் வால்மீகி சிலை நிறுவப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக பல்லாரி மாநகரம் முழுவதும் பேனர்கள் கட்டி வருகிறார்கள். மாநகரில் முன்னாள் அமைச்சரும் கங்காவதி தொகுதி பாஜ சட்டப்பேரவை உறுப்பினருமான ஜனார்தனரெட்டி வீடு அருகில் உள்ள இடத்தில் பேனர் கட்டும் விஷயத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் நாரா பரத்ரெட்டி மற்றும் பாஜ சட்டப்பேரவை உறுப்பினர் ஜனார்தனரெட்டி ஆதரவாளர்கள் இடையில் நேற்று முன்தினம் இரவு மோதல் நடந்தது. இரு கட்சி தொண்டர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்கள் வீசி தாக்கிக்கொண்டனர். அதை தடுக்க முயற்சித்த காவல்துறையினர் மீதும் கற்கள் வீசினர்.

இந்த மோதலில் இரு சட்டப்பேரவை உறுப்பினர்களின் தனியார் கன்மேன்கள் தங்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியில் சுட தொடங்கினர். இதில் காங்கிரஸ் தொண்டர் ராஜசேகர் உடலில் துப்பாக்கி குண்டு துளைத்ததில் அவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பல்லாரி மாநகரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் அசம்பாவிதத்தை தவிர்க்க பல்லாரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் புகாரின் அடிப்படையில் பாஜ சட்டப்பேரவை உறுப்பினர் ஜனார்தனரெட்டி, சோமசேகர ரெட்டி, ஸ்ரீராமுலு உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: