புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, நகர்புற வாக்காளர்களை விட கிராமப்புற வாக்காளர்களிடம் இருந்து கணக்கெடுப்பு படிவங்கள் சேகரிப்பு அதிகமாக காணப்படுகிறது என்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டீஸ்கர், கோவா,குஜராத், கேரளா,மபி,ராஜஸ்தான், தமிழ்நாடு. உபி, மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்கள், அந்தமான் நிகோபார் தீவு,லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் 2 ம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த நவம்பர் 4 ம் தேதி தொடங்கியது. இதில் உபியை தவிர இதர மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்திற்கென்று தனியாக சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில், வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிப்பதில் நகர்புற வாக்காளர்களை விட கிராமப்புற வாக்காளர்களே அதிகம் என தெரியவந்துள்ளது.
தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறுகையில்,‘‘ வாக்குசாவடி நிலை அதிகாரிகளால் கணக்கெடுப்பு படிவங்கள் சேகரிப்பு நகர்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிகமாக இருந்தது. உபியின் லக்னோ, கான்பூர், நொய்டாவில் மிக குறைவான படிவங்கள் சேகரிப்பு காணப்பட்டது.நகர்ப்புறங்களில் உள்ள வாக்காளர்கள் தொழில்முறை கடமைகளினால் வீட்டில் இல்லாததே நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப ஒப்படைக்காததற்கான காரணம் என கருதப்படுகிறது. கடந்த ஆண்டு பீகாரில் நடந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் போது பாட்னா உள்ளிட்ட நகர்புறங்களிலும் இதே போன்ற நிலை இருந்தது ’’ என்றனர்.
