ஏஐ மூலம் பெண்களின் ஆபாச படங்கள்: க்ரோக் பதிவுகளை அகற்ற எக்ஸ் தளத்திற்கு உத்தரவு; 72 மணி நேர கெடு; ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: க்ரோக் ஏஐ முறையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பெண்களின் ஆபாச படங்கள் அதிகரித்துள்ளதால் அதுபோன்ற பதிவுகளை உடனே அகற்ற எக்ஸ் தளத்திற்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க்க்கு சொந்தமான எக்ஸ் சமூக ஊடக தளத்தில் க்ரோக் (Grok) என்ற ஏஐ செயலி உள்ளது. மற்ற ஏஐ செயலிகள் போல் இல்லாமல் க்ரோக் செயலி கேலி, கிண்டல் முறையில் பயனர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தது. தமிழில் கேள்வி கேட்பவர்களின் மாமா, மச்சான், அண்ணா, தம்பி என்று உறவு சொல்லி க்ரோக் அளிக்கும் பதில்கள் சமூக ஊடக பயன்பாட்டாளர்களிடையே பிரபலம்.

ஒரு போட்டோவை பதிவேற்றம் செய்து அதில் உள்ளவர் அணிந்துள்ள ஆடைகளை ஏஐ மூலம் மாற்றும்படி கேட்டால் உடனே க்ரோக் செய்து தரும். இதனால், பேன்ட் அணிந்தவர்களுக்கு வேட்டி, வேட்டி கட்டியவர்களுக்கு கோர்ட் சூட், சேலையின் நிறத்தை மாற்றுவது என்று எக்ஸ் தள பயனாளர்கள் அவ்வப்போது க்ரோக் உதவியுடன் செய்து வந்தனர். ஒரு விளையாட்டாக நடந்து வந்த இந்த உடை மாற்றம், கடந்த சில நாட்களாக ஆபாச ஏஐ படங்களை உருவாக்க அதிகம் பயன்படுத்தப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக ஒரு பெண்ணின் படத்தை கொடுத்து அதை அரைநிர்வாணமாக, பிகினி உடையில் மாற்றித்தர க்ரோக் செயலியிடம் கேட்டால், உடனே எண்ணற்ற படங்கள் மிகவும் தத்ரூபமாக வந்து விழும். யார், எவர் படம் என்று ஆய்வு செய்யாமல் க்ரோக் செயலி வைத்துள்ள அனைவருக்கும் இந்த படங்கள் வழங்கப்படும். இதை பலர் சமூக தளத்தில் பதிவிட்டு, பரப்புவதால் பலர் அதை உண்மையான படம் என்று நம்ப வழி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் க்ரோக் செயலி மூலம் தனக்கு பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், மாற்று அமைப்பினர் உள்ளிட்ட பெண்களை அசிங்கப்படுத்தும் நோக்கில் க்ரோக் செயலி மூலம் ஆபாச படங்கள் பெறுவது அதிகரித்து விட்டது.

இதுதொடர்பாக பலர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினர். குறிப்பாக சிவசேனா( உத்தவ்பிரிவு) கட்சி எம்பி பிரியங்கா சதுர்வேதியும் இதுபற்றி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து ஒன்றிய அரசு , க்ரோக் என்ற செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் உருவாக்கப்படும் அனைத்து ஆபாசமான மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், தவறினால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் தளத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 மற்றும் தகவல் தொழில்நுட்பம் (இடைத்தரகர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 ஆகியவற்றின் கீழ் உள்ள சட்டப்பூர்வ நெறிமுறைகளை கடைப்பிடிக்கத் தவறியதற்காக, எக்ஸ் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளுக்கான தலைமை அதிகாரிக்கு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பொருந்தக்கூடிய சட்டங்களை மீறி ஏற்கனவே உருவாக்கப்பட்ட அல்லது பரப்பப்பட்ட அனைத்து உள்ளடக்கங்களையும், 2021 தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவுக்கு இணங்க, எந்த வகையிலும் ஆதாரங்களைச் சிதைக்காமல், தாமதமின்றி அகற்ற வேண்டும் அல்லது அந்த வலைக்கணக்குகளை முடக்க வேண்டும். ‘க்ரோக்’ போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சேவைகளைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் ஆபாசமான, நிர்வாணமான, கண்ணியமற்ற மற்றும் பாலியல் வெளிப்படையான உள்ளடக்கங்களை ஹோஸ்ட் செய்தல், உருவாக்குதல், வெளியிடுதல், அனுப்புதல், பகிர்ந்துகொள்ளுதல் அல்லது பதிவேற்றம் செய்வதைத் தடுப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு 72 மணி நேரத்தில் இணங்கத் தவறினால், அது தீவிரமாகப் பார்க்கப்படும். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, தகவல் தொழில்நுட்பச் சட்டம், தகவல் தொழில்நுட்ப விதிகள், பிஎன்எஸ்எஸ், பிஎன்எஸ் மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ், எக்ஸ் தளம், அதன் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் சட்டத்தை மீறும் தளத்தின் பயனர்கள் மீது கடுமையான சட்ட விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் எக்ஸ் தளத்திற்கு நேற்று அனுப்பப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

க்ரோக் என்றால் என்ன?
* எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான எக்ஸ்ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆகும்
* இது எக்ஸ் தளத்தின் தரவுகளை நிகழ்நேரத்தில் அணுகும் திறன் கொண்டது. இதன் மூலம் உலகில் நடக்கும் தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு பதிலளிக்கும்.
* இது மற்ற ஏஐகளைப் போல அல்லாமல், சற்று நகைச்சுவையாகவும், கிண்டலாகவும் பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* மற்ற ஏஐகள் தவிர்க்கும் சில சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கும் இது பதிலளிக்க முயற்சிக்கும். க்ரோக்கிற்கு கட்டுப்பாடுகள் கிடையாது.

Related Stories: