சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான உஸ்மான் கவாஜா, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா(39). இவர் கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் முக்கிய டெஸ்ட் வீரராக திகழ்ந்தார். 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,206 ரன்களை குவித்துள்ளார். இதில் 16 சதங்கள், 28 அரை சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 232 ரன் எடுத்துள்ளார். 40 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 1,554 ரன்கள் அடித்துள்ளார். 9 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக ரன் எடுக்க முடியாமல் தவித்து வந்தார்.
தற்போதைய ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார். இதில் 5 இன்னிங்ஸ்களில் வெறும் 153 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் இவர் விரைவில் ஓய்வு பெற வேண்டுமென முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். நாளை சிட்னியில் 5வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் நேற்று திடீரென சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக உஸ்மான் கவாஜா அறிவித்துள்ளார். உஸ்மான் கவாஜா பாகிஸ்தானில் பிறந்தவர். ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த முதல் முஸ்லீம் வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
* சுயநலவாதியா? கவாஜா உருக்கம்
ஓய்வு குறித்து கவாஜா கூறுகையில், கடந்த சில காலமாகவே ஓய்வு குறித்து யோசித்து வந்தேன். இதுதான் எனக்கு கடைசி தொடராக இருக்கும் என்ற உள்ளுணர்வு எனக்கு இருந்தது. இதுபற்றி பயிற்சியாளரிடம் பேசினேன். 2027ல் நடைபெறும் சுற்றுப்பயணம் வரை நான் விளையாட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், இதுவே விடைபெற சரியான தருணம் என்று நான் உணர்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான சிட்னி மைதானத்தில், அதுவும் எனது சொந்த முடிவின் படி கண்ணியத்துடன் விடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. நான் சுயநலத்துக்காக அணியில் நீடிப்பதாக சிலர் விமர்சித்தனர். அது எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது. நான் எனக்காக அணியில் நீடிக்கவில்லை’ என்றார்.
