பெங்களூரு: இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்ஜோர்ட் மரிஜ்னே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. ஹாக்கி உலகில் இந்திய மகளிர் ஹாக்கி அணியும் முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் திறமையைமை மேலும் வலுப்படுத்துவதற்காக தலைமை பயிற்சியாளராக நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்ஜோர்ட் மரிஜ்னே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையின் கீழ் இந்திய மகளிர் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 4வது இடம் பெற்று சாதனை படைத்திருந்தது. தனது நியமனம் குறித்து மரிஜ்னே கூறுகையில், ‘‘நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய ஆற்றல் மற்றும் தெளிவான தொலைநோக்குடன் திரும்புகிறேன். அணியின் வளர்ச்சியை ஆதரித்து, வீரர்கள் தங்கள் முழு திறனை உலக அரங்கில் அடைய உதவுவேன்” என்றார். இவரது தலைமையின் கீழ் முதல் தொடராக மார்ச் 8 முதல் 14, வரை ஐதராபாத்தில் நடைபெறும் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் இந்திய அணி பங்கேற்கிறது.
