கடும் பனிப்பொழிவால் தக்காளி விளைச்சல் பாதிப்பு

காவேரிப்பட்டணம், ஜன.3: காவேரிப்பட்டணத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து கிலோ ரூ.60 வரையிலும் விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், ராயக்கோட்டை, போச்சம்பள்ளி, சூளகிரி மற்றும் காவேரிப் பட்டணம் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் காவேரிப்பட்டணம், பையூர், சப்பானிப்பட்டி, ஜெகதாப், போத்தாபுரம், ஏர்ரள்ளி, திம்மா புரம், பன்னியள்ளி பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதிகளில் விளையும் தக்காளியை அறுவடை செய்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட், ஈரோடு, கோவை, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். கடந்தாண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டதால் தக்காளி கிலோ ரூ.80 வரையிலும் உழவர் சந்தை, வாரச்சந்தை மற்றும் மண்டிகளில் விற்பனையானது.

இதனால், ஓசூர் பகுதி விவசாயிகள் தக்காளி சாகுபடி பரப்பினை அதிகரித்தனர். இதனால் தக்காளி விலை குறைந்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக, மாவட்டத்தில் கடும் பனிப்ெபாழிவு நிலவி வருவதால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், காவேரிப்பட்டணம் பகுதியில் தக்காளி செடியில் பூக்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. சந்தைக்கு தக்காளி வரத்து குறைந் துள்ளதால், கடந்த வாரம் முதல் தரம் தக்காளி கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.20க்கும், மூன்றாம் தரம் ரூ.15க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று முதல் தரம் தக்காளி கிலோ ரூ.60க்கும், இரண்டாம் தரம் ரூ.30க்கும், மூன்றாம் தரம் 4 கிலோ ரூ100 க்கும் விற்பனையானது. தொடர்ந்து தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து வருவதால் பொது மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: