ஜோகன்னஸ்பெர்க்: 2026ம் ஆண்டுக்கான எஸ்ஏ டி20 தொடர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள முக்கிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஜோபெர்க் சூப்பர் கிங்க்ஸ் மற்றும் டர்பன்ஸ் சூப்பர் ஜெயன்ட்ஸ் இடையிலான 9வது போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய ஜோபெர்க் அணியில் துவக்க வீரர்களாக மேத்யூ மற்றும் கேப்டன் டூபிளெசிஸ் இருவரும் டர்பன்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய நிலையில், நூர் அகமது வீசிய 8வது ஓவரில் மேத்யூ எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரூசோ அடுத்த ஓவரிலேயே ஹார்மரிடம் சரணடைந்தார். 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 30 பந்தில் 47 ரன்கள் குவித்த டூபிளெசிஸ் நூர் அகமது பந்துவீச்சில் போல்டானார்.
இறுதி கட்டத்தில் ராஞ்சனே மற்றும் பெரைரா அதிரடியாக ரன்கள் குவிக்க 20 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் ராஞ்சனே 50 ரன்கள் குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஃபெரைரா வெறும் பத்து பந்துகளை மட்டுமே சந்தித்து 1 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 33 ரன்கள் விளாசினார். சிக்கனமாக பந்துவீசிய டர்பன்ஸ் பவுலர் நூர் அகமது 4 ஓவரில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதை தொடர்ந்து டர்பென்ஸ் அணி பேட்டிங் ஆடியது. கான்வே 19, வில்லியம்சன் 22 ரன்களில் நடையை கட்ட, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே களமிறங்கிய பட்லர் 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் மார்க்ரம் தன் பங்கிற்கு 37 ரன்கள் குவிக்க, கிளாசன் 29, டேவிட் வீஸ் 15 ரன்கள் எடுத்தனர். இறுதி கட்டத்தில் அதிரடியாக 47 ரன்கள் குவித்த ஜோன்ஸ் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இறுதியில் டர்பென்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுக்க போட்டி டிரா ஆனது. அந்த அணியின் கிளீசன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த டர்பென்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதைத்தொடர்ந்து ஜோபெர்க் அணி 8 ரன்கள் குவித்து எளிதாக வெற்றி பெற்றது. 10 பந்துகளில் 33 ரன்கள் எடுத்ததுடன், ஒரு விக்கெட்டையும் கைப்பற்றிய ஃபெரைரா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இன்று இரவு நடக்கும் போட்டியில் பார்ல் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
