பிக்பேஷில் 46 பந்தில் 58 ரன்: பாபர் மந்தமான ஆட்டம்… கில்கிறிஸ்ட் காட்டம்

 

மெல்போர்ன்: 2026ம் ஆண்டுக்கான பிபிஎல் தொடர் ஆஸ்திரேலியாவின் பிரபலமான மைதானங்களில் நடந்து வருகிறது. மெல்போர்னில் நேற்று நடைபெற்ற லீக் தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய மெல்போர்ன் அணி 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. ஜோஷ் பிரவுன் 43, ஹசன் கான் 39 ரன்கள் குவித்தனர். சிஸ்சர்ஸ் தரப்பில் சீன் அபோட் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 19.1 ஓவரில் 168 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

சிஸ்சர்ஸ் தரப்பில் பாபர் அஸாம் 46 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 126 ஆக இருந்தது. கடைசி கட்டத்தில் ஜோயல் டேவிஸ் அதிரடியாக ஆடி15 பந்துகளில் 34 ரன்கள் குவித்ததாலேயே சிட்னி அணியால் இந்த போட்டியில் வெற்றி பெற முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் நட்சத்திர வீரரான பாபரின் ஆட்ட அணுகுமுறையில் மகிழ்ச்சியடையாத கில்கிறிஸ்ட் கூறுகையில் ‘‘டி20யை பொறுத்தவரை அதிரடி ஆட்டம் தான் அவசியம்.

பாபர் அடிக்கும் நிறைய பந்துகள், பவுண்டரியை நெருங்குவதில்லை. அவருக்கு அதிரடி ஆட்டத்தில் விருப்பம் இல்லையா, என்பது தெரியவில்லை. அவர் அடிக்கும் பந்துகள் பெரும்பாலும் சிக்சராக மாறாது. ஒரு பந்துக்கு ஒரு ரன் எடுப்பதற்கு இது ஒருநாள் போட்டி கிடையாது. அனைத்து பொறுப்புகளையும் தனது பார்ட்னர் மீது சுமத்துவதும் சரியாக இருக்காது. ஆனால், ஒரு இன்னிங்ஸை கட்டமைப்பது மிக முக்கியம். இப்போது அவருக்கு அடித்தளம் கிடைத்துவிட்டது என்று நினைக்கிறேன். ஆனால் அவர் இன்னும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்” என்றார்.

Related Stories: