கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட்டில் தனியார் ஷூ கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் ஊத்தங்கரை அருகேயுள்ள கொட்டுகாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்காக தினமும் கொட்டுகாரம்பட்டியில் இருந்து நிறுவனத்தின் பேருந்தில் காலை 6.50மணியளவில் ஊழியர்கள் கம்பெனிக்கு செல்வது வழக்கம். இதேபோல் இன்று காலை பணியாளர்களுடன் புறப்பட்ட பேருந்தை மாதேஸ்வரன் (51) என்பவர் ஓட்டி சென்றார். ஊத்தங்கரை நாட்டாண் கொட்டாய், தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் முன்னால் சென்ற நிறுவனத்தின் பேருந்தை முந்தி செல்ல முயன்றது.
அந்தசமயத்தில் அவ்வழியாக வந்த பைக் கார் மற்றும் கம்பெனி பேருந்து மீது எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் பைக்கை ஓட்டி வந்த நபர் கீழே தவறி விழுந்தார். மேலும் மோதிய வேகத்தில் பைக் மற்றும் ஷூ கம்பெனி பேருந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பேருந்தில் இருந்த ஊழியர்கள் பதறியடித்து கொண்டு பேருந்துக்குள் இருந்து கீழே இறங்கியும், ஜன்னல் வழியாக குதித்தும் உயிர் தப்பினர். சிறிது நேரத்திலேயே பேருந்து மற்றும் பைக் முழுவதும் தீ பரவியது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
