ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,640க்கு விற்பனை!

 

சென்னை: ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,640க்கு விற்பனை ஆகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடை, சீனா மற்றும் இந்தியா மீதான வரி உயர்வு, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள போர் பதற்றம் உள்ளிட்டவையால் தங்கம் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தில் நடத்தலாம் என்ற முடிவுக்கு பல நாடுகள் வந்துவிட்டன. இந்தியாவில் சாமானிய மக்கள் அதிகளவில் செய்யும் முதலீடே தங்கத்தில் தான். ஏதாவது அவசர தேவையென்றால் உடனடியாக பணம் புரட்டுவதற்கு தங்கம் மட்டுமே கைகொடுத்து வருகிறது.

இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவது சாமானிய மக்களை பாதிக்க தொடங்கி இருக்கிறது. முதலீட்டாளர்களின் கவனம் ஒரு நாள் தங்கத்தின் பக்கமும், மறுநாளில் பங்கு சந்தைகள் பக்கமும் மாறி மாறி செல்வதால் இந்த நிலை நீடிக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி ஒரு பவுன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28ம் தேதி ஒரு பவுன் ரூ.88,600 என்ற நிலைக்கு வந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நவம்பர் மாதத்தில் தங்கம் விலை சற்று சரிவு ஏற்பட்டிருந்தாலும், கடந்த வாரத்தில் மீண்டும் உச்சத்தை நோக்கி சென்றுள்ளது. கடந்த 13ம் தேதி மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையானது.

இதன் மூலம் தங்கம் இமாலய உச்சத்தை தொட்டது. இதைத்தொடர்ந்து, 15ம் தேதி ‘அந்தர்பல்டி’ அடித்து விலை குறைந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து, புத்தாண்டான நேற்றும் பவுனுக்கு ரூ.320 குறைந்ததால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்தனர். வெள்ளியும் போட்டி போட்டு சரிந்து வருகிறது. தங்கம், வெள்ளி விலை ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்தில் தாறுமாறாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. இந்நிலையில், இன்று (ஜன.02) ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,640க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,580க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Related Stories: