சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த மடப்புரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(65). இவர் நேற்று முன்தினம் மாலை சிலருடன் சேர்ந்து மடப்புரம் தோப்பு பகுதியில் உள்ள கான்சாகிப் வாய்க்கால் ஓரம் சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென சிதம்பரம் தாலுகா போலீசார் அங்கு வந்துள்ளனர். போலீசாரை பார்த்ததும் சீட்டு விளையாடி கொண்டிருந்தவர்கள் சிதறி ஓடினர்.
போலீசாருக்கு பயந்து ஓடும்போது முதியவர் சுப்பிரமணியன் அருகில் உள்ள கான்சாகிப் வாய்க்காலில் விழுந்தார். நீண்ட நேரத்திற்கு பின் வாய்க்காலில் விழுந்த சுப்பிரமணியன் வெளியில் வரவில்லை. தகவலறிந்து வந்த சிதம்பரம் தீயணைப்பு துறையினர் சுப்ரமணியனை தேடினர். இரவு நேரம் ஆனதால், தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை மீண்டும் தேடுதல் பணி துவங்கப்பட்டது. வாய்க்காலில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை செடிகளை 2 பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். அப்போது இறந்த நிலையில் சுப்பிரமணியன் உடலை வாய்க்காலில் இருந்து மீட்டனர். இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
