மூதாட்டியின் ரூ.800 கோடி சொத்து அபகரிப்பு: அதிமுக நிர்வாகி உட்பட 12 பேர் மீது வழக்கு

தஞ்சை: கணவரின் நண்பர்கள் போல் நடித்து தஞ்சையில் மூதாட்டியின் ரூ.800 கோடி சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த அதிமுக நிர்வாகி உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டையை பூர்வீகமாக கொண்டவர் சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஷேக் சிராஜூதீன். இவருக்கு நாஞ்சிக்கோட்டை, சீராஜ்பூர் நகர், செங்கிப்பட்டி பகுதிகளில் சொத்துக்கள் இருந்தன.

2015ம் ஆண்டு ஷேக் சிராஜூதீன் இறந்தார். அதன்பின் இவரது மனைவி முகமதா பேகம்(76) என்பவரிடம் உங்களது சொத்துகளை பராமரித்து பாதுகாத்து தருவதாக தஞ்சையை சேர்ந்த ஸ்ரீவித்யா சுமதி என்பவர் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இதை நம்பி அவரிடம் பொறுப்பை முகமதா பேகம் ஒப்படைத்தார்.

இதைதொடர்ந்து ஸ்ரீவித்யா சுமதி தனக்கு அறிமுகமான தஞ்சையை சேர்ந்த அதிமுக மத்திய மாவட்ட அம்மா பேரவை தலைவரான கேபிள் செந்தில் (எ) செந்தில்குமார் உள்ளிட்ட சிலர் மூலம் 2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை போலியான பவர், விற்பனை பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து முகமதா பேகத்திடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

மேலும் செங்கிப்பட்டி, சிராஜ்பூர் பகுதியில் முகமதாவுக்கு சொந்தமான பெட்ரோல் பங்கு இடத்தை செந்தில்குமார் தனது உறவினரான ரேவதி, மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகியோருக்கு விற்பனை செய்துள்ளார்.  அத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் நாஞ்சிக்கோட்டை பகுதியில் சிராஜூதீனுக்கு சொந்தமான இடத்தையும் அவர் அன்பளிப்பாக வழங்கி விட்டதாக போலியான ஆவணங்களை தயார் செய்து அபகரித்தனர்.

மேலும் 3 வங்கிகளில் முகமதா பேகம் பெயரில் கணக்கு துவங்கி பண பரிவர்த்தனை செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் தஞ்சையில் உள்ள சிராஜூதீன் வீட்டை உடைத்து அங்கிருந்த ஆவணங்கள், 4 இருசக்கர வாகனங்கள்,2 நான்கு சக்கர வாகனங்கள், பணம், நகைகளை திருடினர். இதுகுறித்து தகவல் அறிந்து செந்தில்குமார் உள்ளிட்டோரிடம் முகமதா பேகம் கேட்டுள்ளார்.

ஆனால் முறையான பதில் அளிக்காமல் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். வயது மூப்பு காரணமாக முகமதா பேகம் அமைதியாக இருந்துள்ளார். இருப்பினும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அளித்த தைரியத்தின்பேரில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.800 கோடி மதிப்பிலான இடத்தை அபகரித்ததாக செந்தில்குமார், பிரகாஷ், ரேவதி, பாஸ்கரன், நாகராஜன், பெட்ரிஷியா ஜோனி, ஸ்ரீவித்யா சுமதி, செல்லப்பன், மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகியோர் மீது தஞ்சை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் செந்தில்குமார் உள்பட 12 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: