வேதாரண்யம்:நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த விழுந்தமாவடி பகுதிக்கு இலங்கையில் இருந்து படகு மூலம் தங்க கட்டிகள் கடத்தி வருவதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து நுண்ணறிவு பிரிவு உள்நாட்டு பாதுகாப்பு தலைவர் மகேஷ், மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் ஆகியோர் உத்தரவின் பேரில் நாகை கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உள்ளிட்ட கியூ பிரிவு போலீசார் பல குழுக்களாக பிரிந்து விழுந்தாமாவடி கடற்கரை பகுதி முழுவதும் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது விழுந்தமாவடி மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர் வந்த மொபட் (ஸ்கூட்டி) பெட்டியை போலீசார் சோதனையிட்டனர். அப்போது பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவரிடம் விசாரணை செய்ததில் நாகையை சேர்ந்த சிவக்குமார் (42) மீனவர் என்பது தெரியவந்தது.
பறிமுதல் செய்த தங்கக் கட்டிகளை எடையிட்டுப் பார்த்ததில் 6 கிலோ இருந்தது தெரியவந்தது. அதன் தற்போதைய மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் ஆகும். உடனடியாக தங்க கட்டிகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டியையும் மற்றம் சிவகுமார் தோப்புத்துறை சுங்கதுறை அலுவலகம் கொண்டு வந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
